ரயில்வே அமைச்சர் மீது சந்தேகம்! தனி விமானத்தில் சென்ற ராகுல்
28 ஆனி 2026 ஞாயிறு 12:16 | பார்வைகள் : 295
ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம், மிகவும் புகழ்பெற்றது. காரணம் இங்கு, 2.5 லட்சம் மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' என, பல நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் படிக்கின்றனர். இனி, இளைய சமுதாயத்தை நம்பினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்த காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், இங்கு ஒரு மாபெரும் போராட்டத்தை சமீபத்தில் நடத்தி, 'தற்போதுள்ள கல்வி திட்டம், இளைஞர்கள் மீது மன ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இதை மாற்ற வேண்டும்' என, பேசினார். இந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதற்கான பின்னணியில் ஒரு சுவாரசியம் உள்ளது.
டில்லியிலிருந்து கோட்டாவிற்கு செல்வதற்கு இரவு நேர ரயிலில் பயணிக்க விரும்பினார் ராகுல். அவருக்கு டிக்கெட், 'புக்' செய்யப்பட்டு விட்டது. மற்ற காங்., தலைவர்கள், பத்திரிகையாளர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. உடனே அவர்கள், மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவை அணுகி, தங்களுக்கு உதவும்படி கேட்டனர்.
'எதற்காக கோட்டா செல்கிறீர்கள்?' என அவர் கேட்க, ராகுலின் நிகழ்ச்சி குறித்து கூறி, அவர் எந்த ரயிலில் செல்ல இருக்கிறார் என்ற தகவல்களையும் அமைச்சரிடம் தெரிவித்தனர். உடனே, அவர்களுக்கு டிக்கெட்களை புக் செய்து தர, அதிகாரிகளுக்கு ரவ்நீத் சிங் உத்தரவிட்டார். இந்த விஷயம் ராகுலுக்கு தெரிந்ததும், அவர் கோபப்பட்டு, தன் ரயில் டிக்கெட்டை, 'கேன்சல்' செய்ய சொன்னார்.
தான் ரயிலில் செல்வது, ரயில்வே அமைச்சருக்கு தெரிந்து விட்டது. ரயிலை அமைச்சர் வேண்டுமென்றே தாமதப்படுத்துவார். இதனால், கோட்டா செல்வதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யும்படி சொல்லி விட்டார் ராகுல். இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவை, தேச துரோகி என வர்ணித்தவர் ராகுல். இதனால், அவர் ஏதாவது செய்து, தன் நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்து விடுவாரோ என, அஞ்சினாராம் ராகுல். கோட்டாவிற்கு தனி விமானம் வாயிலாக சென்ற ராகுல், ரயிலில் டில்லி திரும்பினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan