Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டும் திமுக - தவெக கட்சிகள்: ஆகஸ்டில் அணி மாற்றம் நிகழ வாய்ப்பு?

பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டும் திமுக - தவெக கட்சிகள்: ஆகஸ்டில் அணி மாற்றம் நிகழ வாய்ப்பு?

28 ஆனி 2026 ஞாயிறு 10:52 | பார்வைகள் : 246


பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டுவதில், தி.மு.க., - த.வெ.க., என இரு தரப்பும் காட்டும் ஆர்வம் காரணமாக, வரும் ஆகஸ்டில், தமிழகத்தில் அணி மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூ., இ.கம்யூ., முஸ்லிம் லீக் கட்சிகள் வெளியேறி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளன.

இரு கம்யூனிஸ்டுகளை தவிர, மற்ற கட்சிகள், த.வெ.க., அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன. தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை, ம.தி.மு.க., இன்று அறிவிக்க உள்ளது.

த.வெ.க., அரசுக்கு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, மத்திய அரசின் முழு ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் தான், 'மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க மாட்டோம்' என, முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பா.ஜ., உடன் நெருக்கமாக இருக்கவே த.வெ.க., விரும்புகிறது.

அதற்கான வாய்ப்பாக, டில்லியில் நடக்கும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ புத்தக வெளியீட்டு விழாவை, த.வெ.க., தலைமை கருதுகிறது. வைகோவின் பார்லிமென்ட் உரைகளை தொகுத்து, நுாலாக வெளியிட உள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 4ல் டில்லியில் நடக்கும் இந்நுால் வெளியீட்டு விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட, முதல்வர் விஜய் பெற்றுக் கொள்கிறார். பா.ஜ., - த.வெ.க., நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை, வைகோ செய்து வருவதாக தெரிகிறது.

இதற்கிடையே, கூட்டணி கட்சிகள் கழன்றதால், புதிய அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க., இருக்கிறது. மாநில ஆட்சி கைவிட்டு போன நிலையில், மத்திய அரசையும் பகைக்க, தி.மு.க., தலைமை விரும்பவில்லை. ஏற்கனவே, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் வளையத்தில் உள்ளனர்.

எனவே, பா.ஜ.,வுடன் நெருக்கத்தை ஏற்படுத்த, தி.மு.க.,வும் விரும்புகிறது. இ ச்சூழலில், சென்னை நந்தனத்தில், நாடார் சமுதாய அமைப்புகளின் சார்பில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், காமராஜர் பிறந்த நாள் விழா, வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது.

அந்த மேடையில், மத்திய அமைச்சர் அமித் ஷா, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கைகோர்க்க உள்ளதாக, தி.மு.க., வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய முக்கிய அரசியல் நடவடிக்கைகளாக, இந்த நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து அரங்கேற இருப்பதால், வரும் ஆகஸ்டில், புதிய அணி மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.