Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்ப அலை தாக்கம் தீவிரம்: மருத்துவமனைகளில் “Plan Blanc” அவசர திட்டம்!!

கடும் வெப்ப அலை தாக்கம் தீவிரம்: மருத்துவமனைகளில் “Plan Blanc” அவசர திட்டம்!!

27 ஆனி 2026 சனி 15:30 | பார்வைகள் : 306


கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்ப அலை படிப்படியாக குறைந்துவருகின்றபோதிலும், அதன் சுகாதார விளைவுகள் இன்னும் பல நாட்கள் தொடரக்கூடும் என பிரதமர் அலுவலகமான Matignon தெரிவித்துள்ளது. நாட்டின் மேற்குப் பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்துள்ளதாலும், இன்னும் 50 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளன. அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படாமல் இருக்க பல பொதுநிகழ்ச்சிகள் இந்த வார இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், Samu de Paris வெளியிட்ட தகவலின்படி, நேற்று மட்டும் பரிஸில் வெப்ப அலை காரணமாக 109 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் வீடுகளிலும் பொது இடங்களிலும் ஏற்பட்ட மரணங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 3,400 அவசர அழைப்புகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், Ministère de la Santé கடந்த சில நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கான வருகைகளும், Samu அவசர அழைப்புகளும் தீவிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் கடும் அழுத்தத்தில் செயல்பட்டு வருவதாகவும், இந்த நிலை மேலும் பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து Île-de-France பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் “Plan Blanc” அவசர திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு Vendée, Loire-Atlantique, Indre-et-Loire மற்றும் Jura பகுதிகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ சேவைகள் மறுசீரமைக்கப்பட்டு, தேவையானால் பணியாளர்கள் மீண்டும் அழைக்கப்படுவதோடு அவசரமற்ற சிகிச்சைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன.