தி.மு.க., தோல்விக்கு காரணமான பென் நிறுவனம்: உதயநிதி உத்தரவால் கலைப்பு
14 வைகாசி 2026 வியாழன் 12:06 | பார்வைகள் : 1891
தி.மு.க.,வின் தேர்தல் தோல்விக்கு காரணமான 'பென்' நிறுவனம், உதயநிதியின் உத்தரவால் கலைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: .
தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், 2022 நவம்பரில், வா.மணிகண்டன், சேகர் ஆகியோரை இயக்குனர்களாக கொண்டு, 'பென்' எனப்படும், 'பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட்ஒர்க்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில், மீடியா ஒருங்கிணைப்பு பணிகளை செய்த அந்த நிறுவனம், மெல்ல மெல்ல தி.மு.க.,விற்குள் ஊடுருவியது.
கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை கொடுப்பது, அமைச்சர்களை கண்காணிப்பது என, தன்னை விரிவுபடுத்தியது. இதை, தி.மு.க.,வினர் விரும்பவில்லை. ஆனாலும், தலைமையின் கட்டுப்பாட்டில், பென் நிறுவனம் இருந்ததால், யாராலும் வெளிப்படையாக பேச முடியவில்லை.
'ஓரணியில் தமிழ்நாடு', 'என் ஓட்டு சாவடி வெற்றி சாவடி', 'ஒன்றிணைவோம் வா' என, புதுப்புது 'ஸ்லோகன்'களை கொண்ட திட்டங்களை, கட்சிக்குள் செயல்படுத்தி, தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது பென் நிறுவனம்.
தி.மு.க.,விற்குள் எல்லையற்ற அதிகாரம் கிடைத்ததால், கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக அறிக்கை அளித்து, ஆட்களை மாற்றுவதோடு, தங்களுக்கு தோதான ஆட்களை நியமிக்க தொடங்கியது. இந்த விவகாரம், உளவுத்துறை வழியே, கட்சி தலைமைக்கு தெரிந்துவிடக் கூடாது என கருதிய பென் நிறுவன அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு, தவறான அறிக்கைகளை கட்சிக்கு அளித்தது.
அப்போது, தி.மு.க., நிர்வாகிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, அறிக்கை மாற்றப்படுவதாக எழுந்த புகாரில், தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் மருமகனான பென் ஊழியர் சிக்கினார்.
எனினும், 'வெல்வோம் 200' என்ற பென் நிறுவன அறிக்கையை, ஸ்டாலின் முழுமையாக நம்பினார். அதேநேரம் 'பென்' நிறுவனத்தின் செயல்பாடுகள், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. இதனால், துணை முதல்வராக தாம் வசித்து வந்த 'குறிஞ்சி' இல்லத்திற்குள் பென் நிறுவன ஆட்களை அனுமதிக்கவில்லை. அந்நிறுவனத்தின் அறிவுரையையும் உதயநிதி கேட்கவில்லை.
சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை, கவனித்து வந்தவர் 'பென்' இயக்குனர் மணிகண்டன். அந்த நிறுவனத்துக்கு அடிபணிந்து, 'கவனிப்பு'களை செய்தவர்கள் சட்டசபை தேர்தலில் வேட்பாளர் ஆக்கப்பட்டனர்.
தேர்தல் முடிவில், 'பென்' பரிந்துரைத்த வேட்பாளர்களில், 95 சதவிதம் பேர் தோல்வியை தழுவினர். குறிப்பாக, 60,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்றது 'பென்'. ஆனால், 8,795 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வி குறித்து, கடந்த மே 4ம் தேதி இரவு, ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 'பென்' நிறுவனம் செய்த தவறுகள் குறித்து, உதயநிதி மிக கோபமாக பேசினார். அதே வேகத்தில், 60 நாட்களுக்குள் பென் நிறுவனத்தை கலைத்து விட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, 'பென்' நிறுவனம் கலைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அதில் பணியாற்றிய 290 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோல், சபரீசனின் சகோதரி காயத்ரி நடத்தி வந்த, 'குன்' என்ற விளம்பர நிறுவனமும் கலைக்கப்படுவதாக, தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan