Paristamil Navigation Paristamil advert login

தவெக எம்எல்ஏ ஒரு ஓட்டில் வென்ற விவகாரம்; ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

தவெக எம்எல்ஏ ஒரு ஓட்டில் வென்ற விவகாரம்; ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

14 வைகாசி 2026 வியாழன் 11:05 | பார்வைகள் : 196


தமிழகத்தின் திருப்பத்துார் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்ற த.வெ.க., - எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதி, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்துார் தொகுதியில், தி.மு.க., அமைச்சராக இருந்த பெரிய கருப்பனை, த.வெ.க.,வின் சீனவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரிய கருப்பன் மனு தாக்கல் செய்தார்.

அதில், திருப்பத்துார் தொகுதிக்கு வர வேண்டிய தபால் ஓட்டுகள் தவறுதலாக திருப்பத்துார் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆவணங்களை சமர்ப்பிக்கவும், சட்டசபை நம்பிக்கை ஓட்டெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்கவும் தடை விதித்தது.

இதை எதிர்த்து, சீனிவாச சேதுபதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு செயல்பட்டு இருக்கக்கூடாது. நீதிமன்றத்தின் செயல்பாடு கொடூரமானது' என்றனர்.

மேலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு தடை விதித்தனர். இது தொடர்பாக தேர்தல் கமிஷன், பெரிய கருப்பன் தரப்பினர் இரு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.