Paristamil Navigation Paristamil advert login

நீண்ட கால போராட்டத்திற்கு தயாராக வேண்டும்; பா.ஜ.,வுக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தல்

நீண்ட கால போராட்டத்திற்கு தயாராக வேண்டும்; பா.ஜ.,வுக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தல்

11 வைகாசி 2026 திங்கள் 12:45 | பார்வைகள் : 429


இனி நீண்டகால போராட்டத்திற்கு, பா.ஜ., தயாராக வேண்டும்' என, ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: நான் குழந்தையாக இருந்த போது, குளத்தில் நீந்துவதை தடுக்க, என் பாட்டி, 'குளத்தின் அருகே உள்ள  மரத்தில் ஒரு பேய் இருக்கிறது. அதனால், அதனருகில் போகாதே' என்று சொல்வார். அதுபோல, மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.,வை பேய் போல, தமிழக அரசியல் கட்சிகள் சித்தரித்து வருகின்றன. மோடி எதிர்ப்பை மட்டுமே, தி.மு.க., முழக்கமாகக் கொண்டிருந்தது. காங்கிரஸ் தங்கள் அணியில் இருந்திருந்தால், எடப்பாடி தி.மு.க.,வும் இதைத்தான் செய்திருக்கும். அ.தி.மு.க.,வை எடப்பாடி தி.மு.க., என்றழைப்பது தான் பொருத்தமானது.

தங்களுக்கு போட்டி வந்து விடக்கூடாது என்பதற்காக, பா.ஜ.,வை எதிரியாக சித்தரிக்கின்றனர். ஆந்திரா, புதுச்சேரியில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் ஆட்சி செய்கின்றன. அவை சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகின்றன. ஆனாலும், தமிழகத்தை வித்தியாசமான மாநிலம் எனக்கூறி வருகின்றனர். தமிழகத்தில் தங்களை வெளிப்படையாக அல்லது ரகசியமாக ஒடுக்க விரும்பும் தி.மு.க., மற்றும் எடப்பாடி தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்தது தான் ஆச்சரியம்.

இனி நீண்ட கால போராட்டத்திற்கு, பா.ஜ., தயாராக வேண்டும். அதற்கு  நல்ல, இளமையான, பேரார்வம் உடைய தலைமையை கண்டறிய வேண்டும். அடிமட்டத்திலிருந்து கட்சியை உருவாக்குவதில், கவனம் செலுத்த வேண்டும். மற்ற கட்சிகளின் பேச்சுக்களை புறக்கணிக்க வேண்டும். 'தமிழகம் வித்தியாசமானது'  என்று கூறும் எவருடனும் பா.ஜ., கூட்டணி வைக்கக்கூடாது.  இந்தியாவிலிருந்து தமிழகத்தை பிரிக்க நினைக்கும், பிரிவினைவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்.

அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால், அவருக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்பட்டது. அவர் ஒரு உண்மையான அரசியல் இயக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். அரசியலில் தீவிரமாக ஈடுபட இளைஞர்களை அழைத்தார், அதில், அவருக்கு மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. இந்தப் பணிக்கு நானும் முன்வந்திருப்பேன். பூஜ்ஜியத்திலிருந்து உருவாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், நானும் இப்பணிக்கு வந்திருப்பேன்.

ஆனால், நான் தொழில்நுட்பத்தில் மூழ்கி இருக்கிறேன். இந்தியாவுக்கு ஆழமான தொழில்நுட்பம் தேவை. எனவே, இந்த ஜென்மத்தில், அரசியல் எனக்கு  இல்லை.  நான் என் அரசியல் கருத்துக்களை கூறுவேன். அது என் பேச்சுரிமை. ஆனால், நான் தீவிர அரசியலில் இருக்க மாட்டேன்.

இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.