Paristamil Navigation Paristamil advert login

ஏப்ரல் மாத மாற்றங்கள்: சமூக நலத்திட்டங்களில் முக்கிய உயர்வு!!

ஏப்ரல் மாத மாற்றங்கள்: சமூக நலத்திட்டங்களில் முக்கிய உயர்வு!!

30 பங்குனி 2026 திங்கள் 08:04 | பார்வைகள் : 653


ஏப்ரல் மாதத்தை முன்னிட்டு சமூக நலத்திட்டங்களில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.

  • சமூக நலத்திட்ட உயர்வு அமுல்

ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் சமூக நலத்திட்டங்களின் மறுமதிப்பீடு இவ்வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக “Prime d’activité” உதவித்தொகை மாதத்திற்கு சராசரியாக 50 யூரோ அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 மில்லியன் மக்கள் நேரடியாக பயனடைவார்கள். இந்த உதவித்தொகையின் கூடுதல் போனஸ் 184 யூரோவில் இருந்து 239 யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத்தை (SMIC) தாண்டி வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு இது முக்கிய ஆதரவாக அமையும்.

  • CAF உதவித்தொகைகள் உயர்வு

குடும்ப நலத்திட்டங்களை வழங்கும் CAFஅமைப்பின் கீழ் வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் 0.9% அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஆண்டுதோறும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் வழக்கமான திருத்தமாகும்.பல நலத்திட்டங்கள் இதில் அடக்கம் இந்த உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான AAH, குறைந்த வருமானத்திற்கான RSA, குடும்ப வன்முறைக்கு உள்ளானவர்களுக்கான அவசர உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அடங்குகின்றன.

  • குடும்ப உதவித்தொகை கணக்கீட்டில் மாற்றம்

குடும்ப உதவித்தொகைகளை கணக்கிடும் அடிப்படை தொகை 0.8% உயர்ந்து 478.16 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குழந்தை மற்றும் குடும்ப நலத்திட்டங்களின் தொகைகள் மறுகணக்கிடப்படும்.

  • எரிசக்தி உதவித்தொகை வழங்கல் தொடக்கம்

மின்சாரம் மற்றும் எரிசக்தி செலவுகளை சமாளிக்க வழங்கப்படும் “Cheque Energy” இவ்வாரம் முதல் தகுதி பெற்றவர்களுக்கு தானாக வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.

  • நிக்கோட்டின் பொருட்களுக்கு தடை

நிக்கோட்டின் பைகள் மற்றும் வாய்மூலம் பயன்படுத்தப்படும் இதர பொருட்கள் புதன்கிழமை முதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன. இளைஞர்களிடையே அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  • வருமான வரி அறிவிப்பு தொடக்கம்

2025ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிவிப்பு செயல்முறை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. குடிமக்கள் தங்களது முன்பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களை சரிபார்த்து திருத்திக் கொள்ள முடியும்.

  • உயர் கல்வி விண்ணப்பங்களுக்கு கடைசி நாள்

2026–2027 கல்வியாண்டுக்கான உயர் கல்வி சேர்க்கை விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பங்களை உறுதிப்படுத்த வேண்டிய கடைசி நாள் நெருங்கி வருகிறது.

  • எரிவாயு விலையில் குறைவு

ஏப்ரல் மாதத்தில் எரிவாயு விலையில் சிறிய அளவு குறைவு ஏற்பட்டுள்ளது. சமையல் மற்றும் வெந்நீருக்கான விலை 0.6% குறைந்துள்ளதுடன், வெப்பமூட்டலுக்கான விலையும் குறைந்துள்ளது.