Paristamil Navigation Paristamil advert login

Saint - Dennis மேயர் குறித்து இனவெறி பேச்சு: கடும் அரசியல் சர்ச்சை!!

Saint - Dennis மேயர் குறித்து இனவெறி பேச்சு: கடும் அரசியல் சர்ச்சை!!

29 பங்குனி 2026 ஞாயிறு 08:11 | பார்வைகள் : 588


Saint - Dennis நகரின் புதிய மேயராக பதவியேற்றுள்ள பாலி பகயோகோ(Bally Bagayoko) குறித்து வெளியான கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

CNews தொலைக்காட்சியில் உளவியல் நிபுணர் ஜீன் டொரிடோ (Jean Doridot) தெரிவித்துள்ள கருத்துகளில், மேயர் இனவெறி சார்ந்த ஒப்பீடுகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிராக பல அரசியல்வாதிகள் கடும் கண்டனம் வெளியிட்டதுடன், ஒளிபரப்பு கட்டுப்பாட்டு அமைப்பான Arcom-க்கு முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய சபையில் இடதுசாரி “La France insoumise” கட்சியின் தலைவர்களில் ஒருவரான Mathilde Panot, இவ்வாறான கருத்துக்கள் “ஏற்றுக்கொள்ள முடியாத வெளிப்படையான இனவெறி” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், “இத்தகைய வார்த்தைகள் பிரான்சின் கௌரவத்தை களங்கப்படுத்துகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பந்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக பாலி பகயோகோ தாம் வழக்கு தொடர உள்ளதாகவும், இனவெறிக்கு எதிராக பெரிய பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

CNews தொலைக்காட்சி  மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ள நிலையில், இது ஊடக பொறுப்புத்தன்மை குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், பாலி பகயோகோ தெரிவித்த அரசு ஊழியர்கள் தொடர்பான கருத்துகளும் சர்ச்சையை கிளப்பியிருந்தன. நகரின் அரசியல் நோக்கத்துடன் ஒத்துப்போகாத அரசு ஊழியர்கள் இயல்பாகவே இடமாற்றம் பெறுவார்கள் என அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் டேவிட் அமியல், அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக அரசு ஊழியர்களை நீக்க முடியாது என எச்சரித்துள்ளார்.