Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள் !

இலங்கையில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள் !

27 பங்குனி 2026 வெள்ளி 17:22 | பார்வைகள் : 236


எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவிக்கையில், மார்ச் 20ஆம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் தற்போதைய சூழ்நிலையால் சந்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து அவதானம் செலுத்தி நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, அதிகார சபையின் அதிகாரிகள் தெளிவுபடுத்தப்பட்டு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது மொத்த விற்பனை நிலையங்கள், களஞ்சியசாலைகள் மற்றும் இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அங்குள்ள பொருட்களின் கையிருப்பு மற்றும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சில்லறை விற்பனை சந்தையில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க விலைப்பட்டியலை காட்சிப்படுத்துதல் மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களைக் கண்டறியும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், காலாவதியான மற்றும் காலாவதியாகவிருக்கும் பொருட்களை மீண்டும் சந்தைக்கு விடுவிப்பதைத் தடுக்கவும், தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் நுகர்வோரை ஏமாற்றுவதைக் கண்டறியவும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை மற்றும் உள்நாட்டு எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க சில வர்த்தகர்கள் முற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.