Paristamil Navigation Paristamil advert login

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகவுரி பிரியா சேர்ந்தார்களா?நடந்தது என்ன ?

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகவுரி பிரியா சேர்ந்தார்களா?நடந்தது  என்ன ?

27 பங்குனி 2026 வெள்ளி 16:30 | பார்வைகள் : 241


ஜி.வி.பிரகாஷ் அப்பா ஜார்ஜ் மரியானின் உருவ அமைப்பை ஊரே கேலி செய்கிறது. அவரை குதிரை முட்டை என கிண்டல் அடிக்கிறது. சின்ன வயதில் இருந்தே குதிரைமுட்டை வாத்தியாரின் மகன் என ஜி.வி.பிரகாசும் நண்பர்கள், பெண்களால் புறக்கணிக்கப்படுகிறார். ஜி.வி.பிரகாஷ் காதலுக்கும் அப்பாவின் தோற்றம் எதிரியாக இருக்கிறது. ஐடி வேலைக்காக பெங்களூர் செல்லும் ஜி.வி.பிரகாஷ் தொழிலதிபர் அப்பாஸ் மகள் ஸ்ரீகவுரி பிரியாவை காதலிக்கிறார். அந்த குடும்பமும் ஜார்ஜ் மரியானை அவமானப்படுத்துகிறது. ''என்னிடம் உங்கப்பா மன்னிப்பு கேட்டால்தான் இந்த திருமணம் நடக்கும்'' என எச்சரிக்கிறார் அப்பாஸ். ''உன் வருங்கால மாமனார் என்னிடம் மன்னிப்பு கேட்கணும், நான் யார் தெரியுமா?'' என்கிறார் ஜார்ஜ் மரியான். இவர்கள் சண்டையை மீறி, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகவுரி பிரியா சேர்ந்தார்களா? என்ன நடந்தது? இதுதான் ஹாப்பிராஜ் படக்கதை.

ஒரு ஜாலியான காதல் கதையை, அப்பா சென்டிமென்ட் கலந்து கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் மரியாராஜ் இளஞ்செழியன். ஹாப்பிராஜ் என்ற கேரக்டருக்கு ஏற்ப ஆரம்பம் முதல் கடைசிவரை கலகலவென, எனர்ஜியாக நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரின் காதல் போர்ஷன், பெங்களூர் போர்ஷன், அப்பா சென்டிமென்ட் செட்டாகி இருக்கிறது. குறிப்பாக, கெட்அப், அந்த அப்பாவிதனம் பிளஸ். அப்பாவுக்கும், மாமனாருக்கும் இடையில் அவர் தவிக்கிற இடங்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால், பல எமோஷனல் காட்சிகளில் அவர் ஏமாற்றுகிறார். அப்பா சென்டிமென்ட்தான் படம். அதில் ஹீரோ ஸ்கோர் பண்ணவில்லை. பல இடங்களில் மற்றவர்களை நடிக்க வைத்துவிட்டு ஹீரோவை டம்மி ஆக்கி இருக்கிறார் இயக்குனர்.

ஹீரோயின் ஸ்ரீகவுரி பிரியா கியூட்டாக இருக்கிறார். சில இடங்களில் நடிக்கிறார், டான்ஸ் ஆடுகிறார். சில சீன்களில் வந்தாலும் இன்னொரு ஹீரோயின் பிரார்த்தனா நடிப்பு, அந்த கேரக்டர் மனதில் நிற்கிறது. பெங்களூர் ஐடி ஊழியர் வேடம் மதுரை முத்துக்கு. அது செட்டாகவே இல்லை. அவரும் காமெடி, ஒன்லைன் என்ற பெயரில் கடுப்பேற்றி இருக்கிறார். சின்னத்திரையில் கலக்கியவர், பெரிய திரையில் ஏமாற்றி இருக்கிறார்.

பல ஆண்டு இடைவெளிக்குபின் அப்பாஸ் நடித்து இருக்கிறார். அதே கம்பீரம், அழகு என்றாலும், அவரை இயக்குனர் சரிவர பயன்படுத்தவில்லை. தொழிலதிபர் என்ற கெட் அப்பில் கோட் போட்டுக் கொண்டு சுற்றி வருகிறார். அவருக்கான சீன்கள் ஏனோதானோவென இருக்கிறது. கிளைமாக்ஸிற்கு முந்தைய பொள்ளாச்சி போர்ஷனில் மட்டும் கொஞ்சமாக நடித்து இருக்கிறார். அதேசமயம், ஹீரோ அம்மாவாக வரும் கீதா கைலாசத்தில் பெங்களூர் பார்ட்டி, மலமல பாடலுக்கு ஆடும் விஷயங்கள் செம கலகலப்பு. ஹோம்லியாக பார்த்த அவரை மாறுபட்ட தோற்றத்தில் காண்பித்து இருக்கிறார்கள்.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அப்பாவாக நடித்த ஜார்ஜ் மரியான் நடிப்புதான். குதிரை முட்டை வாத்தியராக வரும் அவரின் கேரக்டர் பின்னணி, இயல்பாக, உருக்கமாக பேசும் டயலாக், அப்பாஸ் உடனான சவால், மோதல், குறிப்பாக, மகன் பாசம், தன் குடும்ப பின்னணி, தான் வளர்ந்த விதம் சொல்வது ஆகியவை பிரமாதம். பலருக்கு தங்கள் அப்பாக்கள், அவர்களின் உழைப்பு, தியாகம், பாசம் நினைவுக்கு வரும், சிலருக்கு அப்பாவை நினைத்து கண்ணீர் வரும். கிளைமாக்ஸ் முடிந்து படம் விட்டு வெளியே வந்தால் கூட ஜார்ஜ் மரியான் முகம் நினைவில் நிற்கிறது. அது அவர் கேரக்டர், நடிப்புக்கு கிடைத்த வெற்றி

ஜி.வி.பிரகாஷ் படம் பாடல்கள் நன்றாக இருக்கும் என நினைத்தால், இதில் சுமார். ஜஸ்டின் பிரபாகர் இசையில் பிளஸ் இல்லை. பெங்களூரை பொள்ளாச்சியை அழகாக காண்பித்து இருக்கிறது மதன் கேமரா. படத்தின் முதற்பாதி பெரிய மைனஸ். அதில் கதையும் இல்லை. சுவாரஸ்யமும் இல்லை. ரொம்பவே போராடிக்கிறது. இடைவேளைக்கு பின்னர் தான் ஓரளவு கதையில் விறுவிறுப்பு, கிளைமாக்ஸ் ஓகே. படத்தின் நீளமும் ஹேப்பிராஜை நெளிய வைக்கிறது.

காமெடி என்ற பெயரில் வட இந்தியர்கள் இருவரை திட்டமிட்டு கிண்டல் அடித்து இருக்கிறார் இயக்குனர். தமிழர்களை இப்படி ஹிந்தி படங்களில் காண்பித்தால் நமக்கு கோபம் வராதா? இயக்குனருக்கு ஏனிந்த வன்மம் என தெரியவில்லை. வலிப்பு நோயை சாதாரண நரம்பு பிரச்னை என்கிறார் ஒருவர். இப்படியெல்லாம் சீன் வைக்கலாமா? அதேப்போல் ஜார்ஜ் மரியான் திடீர் மாற்றம், அந்த பில்டப் சீன் இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால் படம் வேகமெடுத்து இருக்கும். அதெல்லாம் நம்பும்படியாக இல்லை. அதைவிட காமெடி கிளைமாக்சில் அப்பாஸ், ஜார்ஜ் மரியான் சம்பந்தப்பட்ட ஒரு ரயில் பிளாஷ்பேக். பல ஆண்டுகளுக்குபின் இருவரும் பார்த்துக் கொள்ளும்போது இருவருக்கும் அடையாளம் தெரியலையாம். ஒரு ரயில் டிக்கெட் தான் ஞாபகம் படுத்துகிறதாம். ய்ப்பா, முடியலை. இந்த அளவுக்கு ரசிகர்களை அண்டர் எஸ்டிமேட் செய்திருக்க கூடாது டைரக்டர் சாரே. உருவக்கேலி தவறு, ஆளை பார்த்து எடைபோடக்கூடாது, மன்னிப்பு கேட்பது தவறல்ல என்பது போன்றவை டச்சிங். ஆனால், கொஞ்சம் காதல், கொஞ்சம் அப்பா சென்டிமென்ட், கிளைமாக்ஸ் மட்டுமே படத்தில் நிறைவு.