Paristamil Navigation Paristamil advert login

பங்களாதேஷ் தேர்தல்: ‘டார்க் பிரின்ஸ்’ முதல் பிரதமர் வரை – தாரிக் ரஹ்மானின் அரசியல் பயணம்

பங்களாதேஷ் தேர்தல்: ‘டார்க் பிரின்ஸ்’ முதல் பிரதமர் வரை – தாரிக் ரஹ்மானின் அரசியல் பயணம்

14 மாசி 2026 சனி 12:17 | பார்வைகள் : 405


பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பி.என்.பி.) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து பி.என்.பி. மீண்டும் ஆட்சிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மாணவர் போராட்டத்துக்குப் பிந்தைய அரசியல் மாற்றம்

கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் பின்னர் அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

18 மாதங்களுக்கு பின்னர், புதிய அரசைத் தேர்ந்தெடுக்க நாடளாவிய பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடும் போட்டி – பி.என்.பி.க்கு பெரும்பான்மை

300 உறுப்பினர்களைக் கொண்ட பங்களாதேஷ் நாடாளுமன்றத்தில், ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் காரணமாக 299 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் களமிறங்கினர்.

நாடு முழுவதும் உள்ள 42,779 வாக்குச்சாவடிகளில் காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சுமார் 8 இலட்சம் தேர்தல் பணியாளர்களும், 9 இலட்சம் பாதுகாப்பு பணியாளர்களும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பி.என்.பி. மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. எனினும் நேரம் செல்ல செல்ல பி.என்.பி. பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இறுதியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பி.என்.பி. ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாரிக் ரஹ்மான் – அரசியல் வாரிசு

தாரிக் ரஹ்மான், முன்னாள் பிரதமர் கலீதா ஷியாவின் மகன். அவரது தந்தை ஜியாவுர் ரஹ்மான் இராணுவ அதிகாரியாக இருந்து பின்னர் பி.என்.பி. கட்சியைத் தொடங்கி 1977 ஆம் ஆண்டு பங்களாதேஷ் ஜனாதிபதியாக பதவியேற்றார். 1981 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டார்.

பின்னர் அவரது மனைவி கலீதா ஷியா பிரதமராக பதவியேற்று 1991–1996 மற்றும் 2001–2006 காலகட்டங்களில் நாட்டை வழிநடத்தினார். அந்த காலகட்டங்களில் தாரிக் ரஹ்மான் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றினார். முக்கிய தீர்மானங்களில் அவரின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால், எதிர்க்கட்சிகள் அவரை “டார்க் பிரின்ஸ்” என்று குறிப்பிட்டன.

வழக்குகள், சிறை வாழ்க்கை மற்றும் வெளிநாட்டு தஞ்சம்

2007 ஆம் ஆண்டு இராணுவ புரட்சிக்குப் பின் அமைந்த இடைக்கால ஆட்சிக் காலத்தில் ஊழல், பணமோசடி மற்றும் அரசியல் சதித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்த அவர் மருத்துவ காரணங்களுக்காக பிணை பெற்று சிகிச்சைக்காக பிரித்தானிய சென்றார்.

அதன்பின் லண்டனில் வசித்து வந்த அவர், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் தாயார் கலீதா ஷியா மறைவின் பின்னர் பங்களாதேஷ் திரும்பினார்.

மீண்டும் எழுச்சி – புதிய நம்பிக்கை?

தாயின் மறைவுக்குப் பின்னர் பி.என்.பி. கட்சித் தலைவராக பொறுப்பேற்ற தாரிக் ரஹ்மான், குறுகிய காலத்திலேயே கட்சியை ஒருங்கிணைத்து தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளார்.

அவர் தேர்தல் பிரசாரத்தின் போது ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டொலராக உயர்த்துதல், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான பங்களாதேஷை உருவாக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கினார்.

மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்ததன் மூலம் பல தரப்பினரிடமும் ஆதரவைப் பெற்றார்.

சர்ச்சைகளும் தொடரும்

இருப்பினும், கடந்த காலத்தில் இந்தியாவின் பிரிவினைவாத அமைப்பான உல்பாவுக்கு ஆயுதங்கள் அனுப்பியதாக இந்தியா குற்றம் சாட்டியிருந்தது உள்ளிட்ட சில சர்ச்சைகள் தாரிக் ரஹ்மானைச் சூழ்ந்துள்ளன. எனினும், ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் அவர்மீது சுமத்தப்பட்ட பல வழக்குகளில் இருந்து தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமராக வாய்ப்பு

இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் தாரிக் ரஹ்மான் பங்களாதேஷின் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் போராட்டத்துக்குப் பிந்தைய அரசியல் அலையின் பின்னர், புதிய நிரந்தர அரசை உருவாக்கும் இந்த தேர்தல் முடிவு பங்களாதேஷின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

நன்றி வீரகேசரி

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026