Paristamil Navigation Paristamil advert login

எய்ட்ஸ் தொற்று இல்லா தமிழகம் உருவாக்க தமிழக அரசு உறுதி

எய்ட்ஸ் தொற்று இல்லா தமிழகம் உருவாக்க தமிழக அரசு உறுதி

1 மார்கழி 2025 திங்கள் 07:13 | பார்வைகள் : 110


எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க, தமிழக அரசு உறுதியேற்று உள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணியில், 39 ஆண்டுகளாக, தமிழக அரசு வெற்றிகரமாக பணியாற்றி வருகிறது.

எச்.ஐ.வி., தொற்றை முற்றிலும் தடுக்க, மாநில அரசின் கீழ் இயங்கி வரும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, எச்.ஐ.வி., தடுப்பு பணியை திறம்பட செயல்படுத்தி வருகிறது.

இதனால், தமிழகத்தில் எச்.ஐ.வி., தொற்றின் தாக்கம், 2002ம் ஆண்டில் 1.11 சதவீதமாக இருந்த நிலையில், 2023- - 24ம் ஆண்டு 0.16 சதவீதமாக குறைந்துள்ளது. இது, தேசிய சராசரியான, 0.23 சதவீதத்தை விட குறைவாகும்.

ஆண்டுதோறும் டிச., 1ம் தேதி, உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. வரும், 2030ம் ஆண்டுக்குள், எய்ட்சை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இலக்கை அடைய, மாற்று அணுகுமுறை தேவைப்படுகிறது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் வழியே, எச்.ஐ.வி., தொற்றை கண்டறிய, 2,600 நம்பிக்கை மையங்கள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, 81 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 172 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எச்.ஐ.வி., தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து, கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க, அனைத்து கர்ப்பிணியருக்கும், எச்.ஐ.வி., மற்றும் சிபிலிஸ் பரிசோதனை, அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

புதிதாக எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க, தமிழக அரசு உறுதியேற்று உள்ளது.

தமிழகத்தில், எச்.ஐ.வி., தொற்றுடன் வாழ்வோர், சம வாய்ப்புடன், தகுந்த மரியாதை மற்றும் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும்.

எவ்வித பாகுபாடும், ஒதுக்குதலுமின்றி, அவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்