அ.தி.மு.க.,முக்கிய நிர்வாகிகள் கவலை: எதிர்காலம் குறித்து ஆலோசனை
28 கார்த்திகை 2025 வெள்ளி 07:21 | பார்வைகள் : 105
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் தலைமை திணறுவதாலும், மூத்த தலைவர்கள் வெளியேறுவதாலும், 'அப்செட்' ஆகியுள்ள அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து யோசிக்க துவங்கி உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்றரை மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் காட்சிகள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஆளும் தி.மு.க., தலைமையிலான 10 கட்சிகள் கூட்டணி வலுவாக தொடரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமையோ, அதற்கு இணையான கூட்டணி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
கடந்த ஏப்ரல் 11ல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால், எட்டு மாதங்களாகியும், வேறு எந்த கட்சியும் இந்தக் கூட்டணியை எட்டிப் பார்க்கவில்லை.
மாறாக, கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர், அக்கட்சி உடனான உறவை முறித்துள்ளனர்.
அ.தி.மு.க, தடுமாறுகிறது
பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுடனான கூட்டணியை உறுதிப்படுத்த முடியாமல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமியும், பா.ஜ., தலைமையும் திணறும் நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என பகிரங்க குரல் கொடுத்த மூத்த தலைவர் செங்கோட்டையனை, கட்சியிலிருந்து பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியது முதல், அக்கட்சியில் இருக்கும் செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்றவர்.
அரை நுாற்றாண்டாக ஈரோடு மாவட்ட அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பவர். இதனால், செங்கோட்டையன் த.வெ.க.,வில் இணைந்தது, அ.தி.மு.க.,வுக்குள் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களை தக்க வைக்காமல் நீக்கிய பழனிசாமியின் நடவடிக்கையால், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், 'அப்செட்' ஆகியுள்ளனர்.
இதனால், 2021ல் பெரும் வெற்றியை தந்த கொங்கு மண்டலத்தில இம்முறை கட்சி தோற்குமோ என்ற அச்சம் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, கட்சியின் எதிர்காலம் மற்றும் தங்களின் அரசியல் வாழ்வு குறித்து, முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பழனிசாமி மெத்தனம்
கடந்த 2016 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின், அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பின், எந்த தேர்தலிலும் அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை.
எனவே, 2026 சட்டசபை தேர்தல் என்பது, அ.தி.மு.க.,வுக்கு வாழ்வா, சாவா தேர்தலாகும். இத்தேர்தலில் தோற்றால், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
இதை உணர்ந்து, பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறியே தென்படவில்லை. பா.ம.க., இரண்டாக பிளவுபட்டு உள்ளது. தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவே தே.மு.தி.க., விரும்புகிறது. இந்தச் சூழலில், கட்சியையாவது வலிமையாக வைத்திருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களே, கட்சியிலிருந்து வெளியேற நினைத்த முக்கிய நிர்வாகிகளை சமாதானப்படுத்திய வரலாறு உள்ளது. 1996 முதல் 2001, 2006 முதல் 2011 தி.மு.க., ஆட்சியின் போது, கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, ஜெயலலிதா அனைவரையும் அரவணைத்து சென்றார்.
எதிர்காலம் குறித்து அச்சம்
ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. அதிருப்தியை வெளிப்படுத்தினால், யாராக இருந்தாலும் வெளியேற்றி விடுகிறார் பழனிசாமி. அ.தி.மு.க.,வின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதால், செங்கோட்டையனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் என பலரும், கட்சி மாற மனதளவில் தயாராகி விட்டனர்; திரைமறைவில் அதற்கான ஆலோசனையை துவங்கி விட்டனர்.
இதை உணர்ந்து, கட்சியை தக்க வைக்க பழனிசாமி ஏதாவது செய்ய வேண்டும். இன்றைய நிலையில் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே, கட்சியினருக்கு நம்பிக்கை ஏற்படும். இல்லையெனில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என விஜய் சொல்வது உண்மையாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan