பாகிஸ்தான் - ஆப்கனில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகள்
26 கார்த்திகை 2025 புதன் 02:19 | பார்வைகள் : 122
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து, தமிழகம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்,” என, என்.சி.பி., எனும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
மென்பொருள் நிறுவன ஊழியர்கள், சுற்றுலா பயணியர் மற்றும் கல்லுாரி மாணவர்களை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகம் குறிவைக்கின்றனர். சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கு போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகின்றன.
இதன் பின்னணியில், சர்வதேச கடத்தல்காரர்கள் உள்ளனர். இவர்கள் பல அடுக்குகளாக செயல்படுகின்றனர்.
சென்னை போன்ற நகரங்களில் ஹோட்டல், பப், ரிசார்ட், பீச் வில்லா போன்றவற்றுக்கு அடிக்கடி வருவோரை குறிவைத்து, கோகைன், எல்.எஸ்.டி., ஸ்டாம்ப் மற்றும் மெத் ஆம்பெட்டமைன் வினியோகம் செய்கின்றனர் .
இதுபோன்ற இடங்களில் நடக்கும் இரவு விருந்திற்கு வருவோரையும், போதைப்பொருள் கடத்தல்காரராக மாற்றி விடுகின்றனர். இதுவரை பறிமுதல் செய்த போதைப் பொருட்களில் மெத் ஆம்பெட்டமைன் தான் முதலிடத்தில் உள்ளது.
இந்த போதைப் பொருள் உட்கொள்வதால், வலிப்பு, பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
மேலும், போதைப்பொருள் கடத்தல் வாயிலாக கிடைக்கும் பணம், பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது. 2021ல், பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே., 47 துப்பாக்கிகள், 1,000 துப்பாக்கி குண்டுகளை, இந்திய கடற்படையுடன் இணைந்து பறிமுதல் செய்தோம்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் பயங்கரவாதிகள் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டு உள்ளது.
ஆந்திரா, ஒடிசா மாநில எல்லைகளில் செயல்படும் நக்சலைட்டுகள், கஞ்சா மற்றும் ஹாஷிஸ் ஆயில் எனும் கஞ்சா எண்ணெய் கடத்தலில் ஈடுபடுகின்றனர். 2023ல், ஆந்திர மாநில போலீசார் உதவியுடன், அம்மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் வீட்டில், 1,750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு, நக்சலைட்டுகள் போதைப்பொருள் கடத்துவதாக எந்த வழக்கும் பதிவாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan