Paristamil Navigation Paristamil advert login

வியக்க வைக்கும் காட்சிகள் - 'அவதார் 3' திரைப்படம் எப்படி இருக்கிறது ?

வியக்க வைக்கும் காட்சிகள் - 'அவதார் 3'  திரைப்படம் எப்படி இருக்கிறது ?

21 மார்கழி 2025 ஞாயிறு 14:50 | பார்வைகள் : 247


அவதார்( 2009), அவதார் தி வே ஆப் வாட்டர்(2022) படங்களுக்குபின் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்திருக்கும் அவதார் படத்தின் 3ம் பாகம் அவதார் பயர் அண்ட் ஆஷ். உலகம் முழுவதும் ஐமாக்சில், 3டியில் வெளியாகி உள்ள இந்த படம், தமிழிலும் டப்பாகி உள்ளது. முந்தைய 2 பாகங்களை பார்த்தவர்கள், இந்த பாகத்துடன் எளிதில் கனெக்ட் ஆவார்கள். அவர்களுக்கு முன்கதை தெரியும் என்பதால் பல விஷயங்களை, கேரக்டர்களின் தன்மையை எளிதில் புரிந்து கொள்வார்கள். அப்படி பார்க்காதவர்களுக்கு சில விஷயங்கள் பிடிபடாது.


பாண்டோரா என்ற வேற்றுகிரகவாசிகளுக்கும், அவர்களால் வெள்ளைத்தோல் ஆகாயவாசிகள் என்று சொல்லப்படும் எதிர்காலத்தில் வாழும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டைதான் படத்தின் கரு. அதில் கணவன், மனைவி உறவு, அப்பா, மகன் பாசம், குடும்ப சென்டிமென்ட், கடவுள் நம்பிக்கை என பல விஷயங்களை கலந்து ஆக் ஷன் கலந்த ஒருவித மறக்க முடியாத சினிமாவை உணர்வை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

முந்தைய பாகத்தில் கடலில் சண்டையிட்டு எதிரிகளை விரட்டி ஜெயிக்கிறார்கள் ஹீரோ சாம், சோயா தம்பதியினர். அவர்களுக்கு கடல்வாழ் இன மக்கள் உதவியாக இருக்கிறார்கள். இந்த பாகத்திலும் மீண்டும் பழைய வில்லன்களால் அவர்களுக்கு ஆபத்து வருகிறது. ஒரு கடல் திருவிழாவில் ராட்சததிமிலங்கள் போன்ற வினோத விலங்குகள் ஒன்றாக கூடுகையில் அவற்றை கொன்று பணம் சம்பாதிக்க நினைக்கும் வில்லன் கும்பலை, ஹீரோ, ஹீரோயின் அவர்களின் வாரிசுகள், அவர்களின் ஆதரவாளர்கள் எப்படி விரட்டி அடித்து ஜெயிக்கிறார்கள் என்பது கதை. இதற்கிடையில் ஹீரோ குடும்பத்தில் ஒருவராகிவிட்ட, தனது மகன் மைல்சை வில்லன் அடைந்தாரா? அதற்கு புது வில்லி ஓனா சாப்ளின் எப்படி உதவி செய்கிறார். இவர்களின் முடிவு என்ன என்பதையும் என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்

படத்தின் ஹீரோ விஷூவல் எபக்ட் காட்சிகளும், ஆக் ஷனும் தான். பாண்டோரா மக்கள் வசிக்கும் இடங்கள், காடு, மலை, பறக்கும் பாறைகள், ஒரு வித்தியாசமான விலங்கில் பறந்து வந்து வியாபாரம் செய்பவர்கள், அவர்களை வழி மறிக்கும் கொள்ளையர்கள், கடலில் சண்டைபோடும் ராட்சஷ விலங்குகள், எதிர்கால நகரம், ஹீரோ, ஹீரோயின் அவர்கள் டீம் பயன்படுத்தும் பெரிய பறவைகள், சண்டைக்கு வரும் கப்பல், நீர்முழ்கிகள் என வரிசையாக மிரட்டிக் கொண்டே இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இதெல்லாம் அவர் உலகத்தில் மட்டுமே சாத்தியம். இந்த காட்சிகளை எப்படி எடுத்து இருப்பார்கள், எப்படி எடிட் பண்ணியிருப்பார்கள், எப்படி நடித்து இருப்பார்கள் என்பதை யோசித்து பார்க்க முடியாதபடி மிரட்டியிருக்கிறார்கள். அதேபோல் கேமரா வொர்க்கில் காட்டியிருக்கிற மாயஜாலம், கோணங்கள் அவதார் போன்ற படங்களின் மட்டுமே சாத்தியம். இசையும் கதைக்கு பக்கபலமாக இருக்கிறது. அந்த உலகத்திற்குள் நாம் இருக்கும் பீலிங்கை தருகிறது. குறிப்பாக, சேசிங், சண்டைக்காட்சி, ஏவா என்ற பெண் தெய்வத்தை நெருங்கும் காட்சிகளில் இசை அபாரம்.

ஹீரோவாக நடித்த சாம் ஆக் ஷனில் மட்டுமல்ல, பல சென்டிமென்ட் காட்சிகளில் பொறுப்புள்ள அப்பாவாக சிறப்பாக நடித்து இருக்கிறார். அவர் மனைவியாக வருகிற ஹீரோயின் சோயா கோபக்காரியாக பறந்து, பறந்து சண்டைபோடும் இடங்கள், கணவரை காப்பாற்ற வரும் இடங்கள் செம. தெய்வ பக்தியுடன் இருக்கிற அந்த மகள் கிரி, சிக்கலான நேரத்தில் அவள் பிரார்த்தனை செய்யும் இடங்கள், தக்க சமயத்தில் அவள் குரலுக்கு தேடி உதவி ஆகியவை ஹாலிவுட் படத்தில் கூட இவ்வளவு தெய்வ நம்பிக்கையை காண்பிப்பார்களா? நம் குலதெய்வத்தை நினைவுப்படுத்துகிற காட்சிகள் இருக்குமா என்ற வியப்பு வருகிறது. படத்தில் காமெடி பண்ணுகிற அல்லது மாறுபட்ட வேடத்தில் நடித்தவர் வில்லன் மகனாக வரும் மைல்ஸ். அவர் நடிப்பு கலகலப்பு. அதேபோல், படத்தில் பல இடங்களில் பெற்றோர்கள், குழந்தைகள் பாசக்காட்சிகள் வருவதும் சிறப்பு. குடும்பம், பாசம், சென்டிமென்ட் காட்சிகளில் வலுவான சீன்களை அமைத்து, குடும்ப கதை ஆடியன்சையும் வளைத்து போட்டு இருக்கிறார் உலக மகா இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன்.

கடல் வாழ் உயிரினங்களை அழிக்க, வில்லன் டீம் பெரும்படையுடன் வர, அதை தடுக்கும் ஹீரோ டீம் சண்டைதான் கிளைமாக்ஸ். அரை மணி நேரத்துக்கு மேலாக ஓடும் அந்த சீன்கள் மட்டுமே அப்படியொரு அட்டகாசம் நிலத்தில், வானத்தில், கடலில் நடக்கும் அந்த பைட் சீன் விஷூவல் டீரீட்டின் உச்சம் எனலாம். அதேபோல், சூன்யகாரி மாதிரியான வில்லி சம்பந்தப்பட்ட முதற்பாக சண்டை, கணவரை காப்பற்ற செல்லும்போது ஹீரோயின் நடத்துகிற சாகசம் இந்த மூன்றுமே படத்தின் சூப்பர் டூப்பர் ஹைலைட். இதெல்லாம் தியேட்டரில் மட்டுமே, அதுவும் அவதார் மாதிரியான படங்களில் மட்டுமே ரசிக்க முடியும். சூன்யகாரி வில்லியாக வரும் வராங் கெட்அப் நடிப்பில் சிலர்க்கி வைக்கிறார். தமிழ் டப்பிங்கும் ஓரளவு பொருந்தி இருக்கிறது, வில்லன் மகனை குரங்கு பயலே என அழைப்பது, குடும்ப காட்சிகளில் வசனங்கள் செட்டாகி இருக்கிறது.

படத்தின் பெரிய மைனஸ் நீளம். 3.17 நிமிடம் அமர்ந்து படம் பார்க்க பொறுமை வேண்டும். குறிப்பாக, முதற்பாதியில் சில வசன காட்சிகள், சென்டிமென்ட் சீன் அலுப்பை தட்டுகிறது. அதேபோல், குடும்பம் சம்பந்தப்பட்ட பாசக்காட்சிகளை குறைத்து இருக்கலாம். அப்புறம், சில கேரக்டர்களுக்கு இடையேயான உறவு, பகையை இன்னும் எளிமையாக சொல்லியிருக்கலாம். சில ஆக் ஷன் காட்சிகள் லாங் ஷாட்டில் இருப்பதை அதிகமாக ரசிக்க முடியவில்லை. ஆனாலும், கொஞ்சம் தொய்வு வரும்போது அடுத்து ஒரு அதிரடியை காண்பிப்பது திரைக்கதையின் பலம்.

அவதார் முதற்பாகம் மாதிரி இல்லை என்றாலும், 2ம் பாகத்திற்கும் இதற்குமான தொடர்பு அதிகம். 2ம் பாகத்தை விட ஆக் ஷன், திரைக்கதையில் விறுவிறுப்பு. ஆனாலும் அவதார் 3 மாதிரியான படங்கள் சினிமாவில் இன்னொருவகை பிரமாண்டம், உச்சம். இந்திய சினிமாக்களில் நாம் பார்த்திராத இப்படிப்பட்ட பட சினிமாக்களை தியேட்டரில் பார்த்து ரசிக்கும்போது நம்மை மறந்து ஆச்சரியத்தில் முழ்கி, பல பிரமாண்ட நினைவுகளை எடுத்து செல்வது நிச்சயம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்