Paristamil Navigation Paristamil advert login

சீனர்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: 5 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு அனுமதி

சீனர்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: 5 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு அனுமதி

22 கார்த்திகை 2025 சனி 11:25 | பார்வைகள் : 104


சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டினருக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, அந்நாட்டில் உள்ள துாதரகங்களில் மட்டும் இச்சேவை துவங்கப்பட்ட நிலையில், உலகம் முழுதும் வசிக்கும் சீனர்கள் தற்போது இச்சேவையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நம் எல்லை பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கடந்த 2020 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இதில், நம் ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக இருநாட்டு உறவில் விரிசல் விழுந்தது. இதையடுத்து, சீனர்களுக்கான சுற்றுலா விசாவை மத்திய அரசு நிறுத்தியது.

இதுதவிர, கொரோனா தொற்று காரணமாகவும் சீனர்களுக்கு சுற்றுலா விசா நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ரஷ்யாவின் காசனில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட படைகள் பரஸ்பரம் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதேபோல் சீன மக்கள், இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக சுற்றுலா விசா வழங்கும் சேவையும் கடந்த ஜூலை 24ல் துவங்கியது.

எனினும், சீனாவின் பீஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் மட்டுமே சீனர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, சுற்றுலா விசா சேவை கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலகம் முழுதும் வசிக்கும் சீனர்கள், அருகே உள்ள இந்திய துாதரகங்கள் மூலம் சுற்றுலா விசா பெற வசதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபரில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் துவங்கப்பட்டன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்