Paristamil Navigation Paristamil advert login

மாஸ்க் திரைப்படம் கவினுக்கு ஏற்றமா?

மாஸ்க் திரைப்படம் கவினுக்கு ஏற்றமா?

21 கார்த்திகை 2025 வெள்ளி 15:26 | பார்வைகள் : 235


தேர்தல் செலவுகளுக்காக, ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த அரசியல்வாதி பவனின் 440 கோடி பணத்தை, ஆண்ட்ரியாவின் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மாஸ்க் அணிந்த ஒரு கும்பல் திருடுகிறது. இவ்வளவு கோடி பணத்தை பதுக்கி வைத்திருக்கும் ஆண்ட்ரியா யார்? பணத்தை கண்டுபிடிக்க, அவரால் நியமிக்கப்பட்ட கவின் துப்பறிந்து 'மாஸ்க்'கும்பலை கண்டுபிடித்தாரா? அந்த பணத்தை திருடியது யார்? என்ன காரணம்? இதுதான் விகர்ணன் இயக்கிய மாஸ்க் படத்தின் கதை

வழக்கமான ஹீரோ, ஹீரோயின், காதல் இதை மீறி, புது பார்மெட்டில் மாஸ்க் கதையை சொல்ல நினைக்கிறார் இயக்குனர் விகர்ணன் என்பது முதல் சில சீன்களிலேயே தெரிந்துவிடுகிறது. அதற்கேற்ப கவின், ஆண்ட்ரியா, ஹீரோயின் ருஹானி கேரக்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சற்றே ஓரளவு நேர்மையான டிடெக்டிவ் கவின். தனது நண்பர்கள் உதவியுடன் பணத்துக்காக சில, பல வேலைகளை செய்கிறார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பது போல காண்பித்தாலும் ஆண்ட்ரியாவின் உண்மையான முகம் வேறு. பண விஷயத்தில் இவர்களுக்கு இடையே நடக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம்தான் மாஸ்க் கதை.

ஹீரோவாக நடித்திருந்தாலும் அதற்கான இலக்கணங்களை மீறி நடித்து இருக்கிறார் கவின். காமெடி கலந்த, கொஞ்சம் வில்லத்தனம் கலந்த அந்த நடிப்பு அவருக்கு சூட் ஆகி இருக்கிறது. குறிப்பாக, வட இந்திய பெண் ருஹானிக்கும் அவருக்குமான நட்பு, எல்லை மீறும் காட்சிகள் கலகலப்பு. நானும் மோகன் மாதிரி என்று இருவரும் சொல்லும் அந்த சீனுக்கு தியேட்டரில் செம கைதட்டல். அதேபோல் ஆண்ட்ரியாவுடனான மோதல் சீன்களிலும் கவின் பெர்பார்மன்ஸ் ரசிக்க வைக்கிறது. வழக்கமான காதல், கல்யாணம் இல்லாமல் கதை நகர்த்தியிருப்பதும், கவினை திருமணம் ஆனவராக, குழந்தைக்கு அப்பாவாக காண்பித்து இருப்பதும் பிரஷ்

தயாரிப்பாளரான ஆண்ட்ரியா வில்லியாகவும் வருகிறார். வெளியே சமூக சேவகி மாதிரி காண்பித்துக் கொண்டு, வேறுவகை 'சர்வீஸ்' செய்யும் அந்த கேரக்டரில் அழகாக நடித்து இருக்கிறார். அவரின் கெட்அப், குளோசப் ஷாட் ரசிக்க வைக்கிறது. ஆனாலும், இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்து இருக்கலாம். இவர்களை தவிர, வில்லனாக வரும் பவன், கவின் அப்பாவாக வரும் சந்திரன், கவின் நண்பர் கல்லுாரி வினோத் ஆகியோரும் நல்ல தேர்வு.

கவின் மாமனராக வரும் சார்லி ஆரம்பத்தில் அப்பாவியாக, பாசக்காரராக வருகிறார். கடைசியில் அவர் கேரக்டர் மாறும்விதம், அவர் பேசும் டயலாக் யாருமே எதிர்பாராதது. சாமான்ய மக்களின் குரலாக அவர் கேரக்டர், அவர் செயல்பாடு இருக்கிறது. வெல்டன் சார்லி. ஆண்ட்ரியா டீமில் இருக்கும் பேட்டரி, சில சீன்களில் வரும் ரெடின் கிங்ஸ்லீயும் ரசிக்க வைக்கிறார்கள். படத்தின் ஹீரோ திரைக்கதைதான். 440 கோடியை திருடியது யார் என்ற கேள்வியும், அடுத்தடுத்து நடக்கும் சீன்களும் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. இடையில் ஓட்டல், ஆண்ட்ரியாவின் பிஸினஸ், அவரின் பிளாஷ்பேக் சீன்கள், அரசியல்வாதிகளின் அராஜகம் என்ற சீன்கள் ஓகே.

முதற்பாதியில் வேகம் குறைவு என்றாலும், இரண்டாம்பாதி விறுவிறுப்பு. அதிலும் கிளைமாக்ஸ், அதில் வரும் டுவிஸ்ட் படத்தை ரொம்பவே ரசிக்க வைக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் கேமரா ஆங்கிள் பாடல் காட்சிகளை, ஆண்ட்ரியாவை அழகாக காண்பிக்கிறது. திரைக்கதையை தாண்டி படத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்வது ஜி.வி.பிரகாஷ் பாடல்களும், பின்னணி இசையும் தான். கண்ணுமுழி பாடல் ஆட வைக்கிறது. இதுதான் எங்கள் உலகம், கிளைமாக்ஸ் பாடல் செம பாஸ்ட். எம்.ஆர்.ராதா டச், வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக, இயக்குனர் நெல்சன் வாய்ஸ் ஓவர், அப்பாவி குடும்பத்தலைவியாக வரும் தொகுப்பாளர் அர்ச்சனாவின் நடிப்பும் ரொம்பவே ரிலாக்ஸ்.

சூப்பர் மார்க்கெட்டில் கஸ்டமர்களை பயண கைதிகளாக வைத்து பணத்தை கடத்துகிற சீன், கவின், ருஹானி ஈர்ப்பு காட்சிகள், சார்லி சம்பந்தப்பட்ட டுவிஸ்ட் மாஸ்க்கை கமர்ஷியலாக எடுத்து செல்கின்றன. பவன் சம்பந்தப்பட்ட அரசியல் காட்சிகள் பல படங்களில் பார்த்தது. தயாரிப்பாளர் என்பதால் ஆண்ட்ரியாவை ஓரளவு டீசன்ட் வில்லியாக காண்பித்து இருப்பதும் வேகத்தடை. இன்னும் ஷார்ப்பாக எடுத்து இருக்கலாம். முதற்பாதியை விறுவிறுப்பாக்கி இருக்கலாம் என சில குறைகள் இருந்தாலும், மாறுபட்ட விறுவிறு திரைக்கதை, நடிகர்களின் வித்தியாசமான கேரக்டர் வடிவமைப்பு, கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டால் மாஸ்க் பாஸ் மார்க்கை தாண்டுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்