Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கு சுப்ரீம் கோர்ட் அளித்த பதில்; முழு விவரம்!

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கு சுப்ரீம் கோர்ட் அளித்த பதில்; முழு விவரம்!

20 கார்த்திகை 2025 வியாழன் 15:13 | பார்வைகள் : 166


மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பான தீர்ப்பை தொடர்ந்து, 14 கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டில் ஜனாதிபதி எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு இன்றைய தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் பதில் அளித்துள்ளது.

கேள்வி1; ஒரு சட்ட மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?

பதில்: மசோதா தன்னிடம் வந்தவுடன் கவர்னருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. 1.ஒப்புதல் தரலாம். 2.நிறுத்தி வைக்கலாம். 3.ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம். நிறுத்தி வைக்கும்போது, அதை அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சட்டசபைக்கு திருப்பி அனுப்புதல் என்ற வகையில் நான்காவது வாய்ப்பு கிடையாது.

எனவே, நிறுத்தி வைத்தல் என்ற முடிவை எடுத்தால், அதை அவசியம் சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். சட்டசபைக்கு திருப்பி அனுப்பாமலேயே கவர்னர் மசோதாவை தன்னிடம் வைத்திருப்பது, கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது. சட்டசபைக்கு திருப்பி அனுப்பாமல், கவர்னர் தன்னிடமே மசோதாவை வைத்திருக்கலாம் என்ற மத்திய அரசின் முடிவை கோர்ட் நிராகரிக்கிறது.

கேள்வி 2; மசோதா கவர்னர் இடம் சமர்ப்பிக்கப்படும்போது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?

பதில்; சாதாரணமாக, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைப்படியே கவர்னர் செயல்படுவார். ஆனால், அரசியல் சட்டத்தின் 200ம் பிரிவின்படி கவர்னருக்கு தனியுரிமை உள்ளது. அதன்படி அவர், மசோதாவை திருப்பி அனுப்பலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்.

கேள்வி 3; அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி, கவர்னருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக்கொள்ள கூடியதா?

பதில்: அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி கவர்னருக்கான தனியுரிமைகள் ஏற்கத்தக்கவையே. கவர்னர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கோர்ட் ஆய்வு செய்து கொண்டிருக்க முடியாது. ஆனால், நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்காமல், காரணம் இன்றி முடிவு எடுக்காமல் இருந்தால், தன் கடமையை செய்யும்படி ஒரு வரையறுக்கப்பட்ட உத்தரவை (limited mandamus) கவர்னருக்கு கோர்ட் பிறப்பிக்க முடியும்.

கேள்வி 4: அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி கவர்னரின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு தடையாக உள்ளதா?

பதில்: அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு என்பது நீதித்துறை மறுஆய்வுக்கு முழுமையான தடையாகும். எனினும், அரசியல் சட்டப்பிரிவு 200ன்படி கவர்னர் நீண்டகாலமாக முடிவு எடுக்காத வழக்குகளில், இந்த நீதிமன்றம் பயன்படுத்த அதிகாரம் அளிக்கும் நீதித்துறை மறுஆய்வின் வரையறுக்கப்பட்ட வரம்பை மறுக்க, இந்த தடையை பயன்படுத்த முடியாது. கவர்னர் தனிப்பட்ட விலக்குரிமையைப் பெற்றிருந்தாலும், கவர்னரின் அலுவலகம் இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும்.

கேள்வி 5; அரசியல் சட்டத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

கேள்வி 6; அரசியல் சட்டத்தின் 201வது பிரிவின் படி, ஜனாதிபதியின் தனி உரிமை ஏற்றுக்கொள்ள கூடியதா?

கேள்வி 7; அரசியல் சட்டத்தில் ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

கேள்வி 5, 6 மற்றும் 7க்கு ஒரே பதில் அளிக்கப்பட்டு உள்ளது. அது பின்வருமாறு: அரசியல் சட்டத்தின் 200 மற்றும் 201ம் பிரிவுகள், அரசியலமைப்பை நிர்வகிப்போர், தங்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற ஒரு கூட்டாட்சி மற்றும் ஜனநாயக நாட்டில் சட்டம் இயற்றும் செயல்பாட்டில் எழக்கூடிய தேவை, பல்வேறு சூழ்நிலைகளை மனதில் கொண்டு இந்த நெகிழ்வுத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கவர்னர், ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதிப்பது என்பது, அரசியலமைப்பு மிகவும் கவனமாகப் பாதுகாக்கும் இந்த நெகிழ்ச்சித்தன்மைக்கு முற்றிலும் முரணாக இருக்கும்.அரசியல் சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு இல்லாத நிலையில், பிரிவு 200ன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை இந்த நீதிமன்றம் பரிந்துரைப்பது பொருத்தமானதாக இருக்காது.

கவர்னருக்கு சொல்லப்பட்டதை போன்ற காரணமே, பிரிவு 201ன் கீழ் ஜனாதிபதிக்கும் பொருந்தும். எனவே, அரசியல் சட்டப்பிரிவு 201ன் கீழ், அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு நீதித்துறை ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை கொண்டு ஜனாதிபதியை கட்டுப்படுத்த முடியாது.

கேள்வி 8; ஒரு கவர்னர் தனக்கு வந்த மசோதாவை ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் போது, ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பான அரசியல் சட்ட விதிமுறைகள் குறித்து, ஜனாதிபதி 143வது சட்ட பிரிவின் படி உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்க வேண்டுமா?

பதில்: கவர்னரால் ஒரு மசோதா அனுப்பி வைக்கப்படும் ஒவ்வொரு முறையும், ஜனாதிபதி நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதியின் மனதுக்கு திருப்திகரமாக இருந்தால் போதுமானது. தெளிவு இல்லாமை அல்லது ஆலோசனை தேவை என்றால், ஜனாதிபதி அதை கேட்டுப்பெறலாம்.

கேள்வி 9; அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி கவர்னரும், 201வது பிரிவின் படி ஜனாதிபதியும் எடுக்கும் முடிவுகள் சட்டம் ஆவதற்கு முன்னரே சட்டத்தன்மை (நீதி விசாரணைக்கு உட்பட்டவையா) வாய்ந்தவையா? அந்த சட்டம் அமல் செய்வதற்கு முன்னதாகவே, நீதிமன்றங்கள் அவற்றின் பொருள் தொடர்பான விசாரணைகளை நடத்தலாமா?

பதில்: இல்லை. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 200 மற்றும் பிரிவு 201ன் கீழ் கவர்னர் மற்றும் ஜனாதிபதியின் முடிவுகள், சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை அல்ல; மசோதாக்கள் சட்டமாக மாறினால் மட்டுமே அவற்றை எதிர்க்க முடியும்.

கேள்வி 10; கவர்னர் அல்லது ஜனாதிபதியின் உத்தரவுகளை, அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின்படி வேறு வகையில் பிறப்பிக்க முடியுமா?

பதில்: இல்லை. அரசியல் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதையும், ஜனாதிபதி/கவர்னர் உத்தரவுகளையும் இந்த நீதிமன்றம் இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது. அரசியல் சட்டம், குறிப்பாக பிரிவு 142, மசோதாக்களின் deemed assent (கருதப்பட்ட ஒப்புதல்) என்ற கருத்தை அனுமதிக்காது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்

கேள்வி 11; மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி, கவர்னர் ஒப்புதல் தராமலேயே அமலுக்கு கொண்டு வர முடியுமா?

பதில்: கேள்வி 10க்கு அளிக்கப்பட்ட பதில் அடிப்படையிலான விளக்கம். அரசியல் சட்டப்பிரிவு 200ன் கீழ் கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. பிரிவு 200ன் கீழ் கவர்னரின் சட்டமன்ற செயல்பாடுகளை மற்றொரு அரசியலமைப்பு அதிகாரத்தை கொண்டு மாற்ற முடியாது

கேள்வி 12; உச்சநீதிமன்றத்தின் ஒரு பெஞ்ச் தனக்கு முன் வந்துள்ள ஒரு வழக்கில், அரசியல் சட்டத்தின் 145 (3)ன் படி, அரசியல் சட்டம் தொடர்பான பல விதமான கேள்விகள் எழும்போது, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பது கட்டாயமா?

பதில்; இந்தக் கேள்வி பொருத்தமானதல்ல என்பதால் பதிலளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

கேள்வி 13; அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின் படி, உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்திற்கு மட்டும் உட்பட்டவையா அல்லது அமலில் இருக்கும் அரசியல் சட்ட நடைமுறைகளுக்கு முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?

பதில்; கேள்வி 10ன் ஒரு பகுதியாக பதிலளிக்கப்பட்டது.

கேள்வி 14; மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான விவகாரத்தில், அரசியல் சட்டத்தின் 131வது பிரிவின்படி சிறப்பு வழக்கு தொடுப்பதை தவிர, உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகார வரம்பை ஏதாவது வகையில், அரசியல் சட்டம் தடுக்கிறதா?

பதில்; பொருத்தமற்றது என்பதால் இந்த கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்