Paristamil Navigation Paristamil advert login

தமிழர்கள் விரும்பி ஹிந்தி கற்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

தமிழர்கள் விரும்பி ஹிந்தி கற்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

18 கார்த்திகை 2025 செவ்வாய் 09:13 | பார்வைகள் : 127


தமிழர்கள் விருப்பத்துடன் ஹிந்தி கற்க வேண்டும், என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பேசினார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் நேற்று அவர் பேசியதாவது:

மதுரை கிளை, 20 ஆண்டுகளுக்கும் மேல், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இணையாக சிறப்பாக இயங்கி வருகிறது. சிவில், கிரிமினல் வழக்குகளின் தீர்வு விகிதம் பல ஆண்டுகளாகவே அதிகரித்து காணப்படுகிறது.

மாநிலத்தின் 38 மாவட்டங்களில், 14 மாவட்டங்கள் மதுரை அமர்வின் கீழ் வருகின்றன.

சென்னை முதன்மை இருக்கைக்கு ஒவ்வொரு முறையும் நீண்ட துாரம் பயணம் செய்வதால், பயணம், தங்கும் செலவுகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். அதை தவிர்க்கவே மதுரை கிளை நிறுவப்பட்டது.

கோரிக்கை கோவை, சேலம், ஈரோடு, திருவாரூர், அரியலுார், நாமக்கல் பகுதியினருக்கு சென்னை செல்வதை விட மதுரையே அருகாமையில் உள்ளது. மேற்கண்ட மாவட்டங்களையும் மதுரை கிளையின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்.

மதுரை கிளை, உயர்நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வாக இருப்பதால், முதன்மை இருக்கைக்கு வழங்கப்படும் அதிகார வரம்பை மதுரை கிளைக்கும் வழங்க வேண்டும். குறிப்பாக, கடல்சார், நடுவர் மன்றம், சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகள் மதுரை கிளையில் விசாரிக்கப்பட வேண்டும்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை சென்னை அமர்வில், 100 ஆகவும், மதுரை அமர்வில், 40 ஆகவும் அதிகரிக்க வேண்டும். இது சம்பந்தமான கோரிக்கையை ஜனாதிபதி, பிரதமர், தமிழக கவர்னர், முதல்வர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆகியோருக்கு அனுப்ப உள்ளேன்.

ஏற்காதீர்கள் தமிழர்கள் விருப்பத்துடன் ஹிந்தி கற்க வேண்டும். தேசிய மொழியாக ஹிந்தி உள்ளது. தமிழகத்தை தவிர்த்து, நாட்டின் அனைத்து பகுதியினரும் ஹிந்தி பேசுகின்றனர். தமிழக எல்லையை தாண்டினால் மொழி பிரச்னையால் தமிழர்கள் சவால்களை சந்திக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சரளமாக ஹிந்தி பேசுவார். அரசியல்வாதிகள் கூறுவதை ஏற்காதீர்கள். அவர்கள் மக்களை முட்டாளாக்குகின்றனர். வெறும், 10 சதவீத மக்களே நாட்டில் ஆங்கிலம் பேசுகின்றனர்.

இக்கருத்துகளுக்காக நான் ஹிந்தியை திணிப்பதாக கருத வேண்டாம். அண்ணாமலை பல்கலையில் தமிழில் பட்டயப்படிப்பு படித்துள்ளேன்.

அக்காலகட்டத்தில், தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, ஹிந்தி எழுத்துகளை கருப்புமையால் அழித்தவர்களுள் நானும் ஒருவன். எனவே வாய்ப்பு கிடைத்தால், விருப்பம் இருந்தால் ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு பேசினார்.

சங்க தலைவர் ஐசாக் மோகன்லால், செயலர் சரவண குமார், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்