Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்?

கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்?

23 பங்குனி 2020 திங்கள் 09:21 | பார்வைகள் : 13372


 மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.

 
இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது.
 
 
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீதான ஒரு சமீபத்திய ஒரு ஆய்வில் நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன் என்பதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக லெய் பாங் தலைமையிலான சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
 
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நோயாளிகளில் பலருக்கு நீரிழிவு மற்றும் பெருமூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் (Cerebrovascular diseases) இருந்தது கண்டறியப்பட்டது.
 
சீனாவில் நடந்த மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் தாக்கிய 173 பேர்களில் சுமார் 41 நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், சுமார் 28 நோயாளிகளுக்கு நீரழிவு நோய் இருந்தது என்றும், 10 நோயாளி களுக்கு இதய நோய் இருந்தது என்றும், 4 நோயாளிகளுக்கு பெரு மூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
 
இறுதியாக, மூன்றாவது ஆய்வில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 140 நோயாளிகளில், 42 பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 17 பேருக்கு நீரிழிவு நோய் இருந்ததும் கண்டறியப்பட்டது.
 
இந்த மூன்று ஆய்வுகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் ஒரு வகை மருந்துகளை (angiotensin-converting enzyme (ACE) inhibitors) எடுத்துக்கொண்டார்கள் என்பது கண்டறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ்கள் ஒருவகையான என்சைம் (angiotensin-converting enzyme 2 (ACE2) மூலமாகவே மனித உயிரணுக்களைத் தாக்கி அவற்றினுள்ளே நுழைகின்றன என்றும், இந்த என்சைமை நுரையீரல், குடல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகிய அனைத்து உடல் பாகங்களும் உற்பத்தி செய்கின்றன என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
 
முக்கியமாக, இந்த என்சைம் செயல்பாட்டை தடை செய்யும் மருந்தை உட்கொள்ளும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உடலில் இந்த என்சைம் உற்பத்தியானது மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உட்கொள்ளும் சில மருந்துகள் கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களுக்கு உள்ளே நுழைய உதவும் என்சைம் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
ஆக மொத்தத்தில், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. இது தவிர, நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள (ACE2) மரபணுவும் மாற்றங்களுக்கு உள்ளாகி என்சைம் (ACE2) உற்பத்தி அதிகமாகலாம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதனால், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்க வேண்டுமானால், நீரிழிவு நோயாளிகள் தாங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா என்று மருத்துவர்களை ஆலோசித்து முடிவு செய்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை அவர்களால் தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்