Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கை சுத்தம் என்பது ஆரோக்கியத்தின் அடையாளம்

கை சுத்தம் என்பது ஆரோக்கியத்தின் அடையாளம்

9 சித்திரை 2020 வியாழன் 17:43 | பார்வைகள் : 13267


 இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்குதலில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது. கொரோனா காலம் மட்டுமல்ல எந்த காலத்திலேயும் கை சுத்தம் என்பது ஆரோக்கியத்தின் மிகப்பெரிய அடையாளம்.

 
சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன, குறிப்பாக குழந்தைகளுக்கு பரவுகின்றன.
 
 
உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆண்டில் 170 கோடி பேரை பாதிக்கும் இந்த நோய்க்கு, 6 லட்சம் குழந்தைகள் பலியாகி விடுகிறார்கள்.
 
தூய்மையின்மை காரணமாகவும், கை அசுத்தமாக இருப்பதும் நோய் தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி வெளியில் சென்று வந்த பிறகு, கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவதுதான். பல குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம்.
 
எனவே கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகள், சிறுநீர், மலம் பட்ட துணிகளை கையாளும்போது கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படி செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.
 
கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலக கை கழுவும் நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. ‘தூய்மையான கைகள்; பாதுகாப்பான வாழ்க்கை’ என்பதே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்