Paristamil Navigation Paristamil advert login

மயானங்களில் தஞ்சமடைந்த பாலஸ்தீன குடும்பங்கள் - காஸாவின் அவல நிலை

 மயானங்களில் தஞ்சமடைந்த பாலஸ்தீன குடும்பங்கள்  -  காஸாவின் அவல நிலை

4 கார்த்திகை 2025 செவ்வாய் 15:01 | பார்வைகள் : 289


காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் உடல்கள் புதைக்கப்படும் இடுகாடுகளில், போரால் இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீன குடும்பங்கள் தஞ்சமடைந்திருப்பது காஸாவின் அவல நிலையைக் குறிக்கிறது.

காஸாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த கொடூர தாக்குதல்களால், காஸாவின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன.

போரால் காஸாவின் பெரும்பான்மையான மக்கள்தொகை, சுமார் 20 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதே கள நிலவரம். 

கடந்த அக். 10-இல் போர் நிறுத்தம் காஸாவில் அமல் ஆன பின், இடம்பெயர்ந்தவர்களுள் சிறு பகுதியினர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியிருக்கின்றனர். பலரது வீடுகள் சேதமடைந்து சுக்குநூறாகியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் கடந்த 5 மாதங்களாக குழந்தைகள், குடும்பத்துடன் மயானத்தில் கொட்டகை அமைத்து தஞ்சமடைந்திருக்கும் ‘மைசா ப்ரிகா’ போன்றவர்களுக்கு, எலும்புக்கூடுகளே உற்றார் உறவினராக மாறியிருப்பதை தவிர்க்க இயலவில்லை.

கல்லறைகளே இருக்கைகள் இந்த மக்களுக்கு. இந்தக் குடும்பத்தைப் போன்று பல குடும்பங்கள் மயானங்களிலேயே வாழ்க்கையைக் கழிக்கின்றனர். சூரிய அஸ்தமனத்துக்குப்பின் மயானப் பகுதிகளுக்கு நாய்கள் உலா வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

சரி, மயானத்திலாவது அமைதி நிலவும் என்று தஞ்சமடைந்த முஸ்லிம் மக்களுக்கு, போர்நிறுத்தத்துக்கு முன்பு வரை, இஸ்ரேலின் தாக்குதல்கள் அப்பகுதிகளைக்கூட விட்டுவைக்கவில்லையாம். மயானங்களிலும் தாக்குதல்கள் நடந்திருப்பதை இந்தக் குடும்பங்கள் திகிலுடன் விவரிக்கின்றன.

அதனை, ஐ.நா.வும் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து, இஸ்ரேல் தரப்பால் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், மயானங்களைப் பாதுகாப்பு கேடயமாக ஹமாஸ் படை பயன்படுத்தி தஞ்சமடைந்திருந்ததாகவும், அவர்களைக் குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் உக்கிரமடைந்தைருந்தபோது செத்து மடிந்த பாலஸ்தீன உயிர்களைப் புதைக்க இடமின்றி, மருத்துவமனை வளாகஙக்ளில் ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்பட ஆங்காங்கே மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததும் அவலத்தின் உச்சம். 

காஸா போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 68,800-க்கும் மேல். இப்போது, தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்கள் எங்கே இருக்கின்றன என்பதைத் தேடி அலையும் பரிதாபத்துக்கு காஸா மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தம் அமலானது வரவேற்கத்தக்கதெனினும், காஸா மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றால் மட்டுமே தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்