ஜேர்மனியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வருமான வரி விலக்கு அறிவிப்பு

15 ஐப்பசி 2025 புதன் 07:36 | பார்வைகள் : 293
ஜேர்மனியில் ஓய்வு பெற்றவர்கள் மாதம் 2,000 யூரோ வரை வரி இல்லாமல் சம்பாதிக்க அனுமதிக்கப்படவுள்ளது.
ஜேர்மன் அரசு, 2026 ஜனவரி 1 முதல் மாதம் 2,000 யூரோ வருமானம் ஈட்டும் ஒய்வுபெற்றவர்களுக்கு வரிவிலக்கு வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டம், நாட்டின் வேலைவாய்ப்பு குறைப்பாட்டை சமாளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்ட 'Active Pension Plan' எனப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஜேர்மனியில் 2025-க்குள் 4.8 மில்லியன் தொழிலாளர்கள் ஒய்வு பெறவுள்ள நிலையில், திறமையான பணியாளர்களின் பற்றாக்குறை பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம், மூத்த நிபுணர்களின் அனுபவத்தை நிறுவனங்களில் நீடிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வேலைவாய்ப்பு விகிதம் உயரும், அரச வருவாய் அதிகரிக்கும் மற்றும் ஓய்வூதிய, சுகாதார நிதிகளுக்கு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம், ஒய்வுபெற்றோர் வேலை தொடரும் ஆர்வம் அதிகரிக்கும். இதற்கான செலவு ஆண்டுக்கு 890 யூரோ மில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், IW நிறுவனம் இது 1.4 பில்லியன் யூரோவாக இருக்கலாம் என்றும், 340,000 பேர் இந்த வரிவிலக்கை பயன்படுத்தலாம் என்றும் கணித்துள்ளது.
மற்ற நாடுகளும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, கிரீஸ் நாட்டில் ஓய்வுபெற்றோர் முழு ஓய்வூதியத்துடன் வேலை செய்ய அனுமதித்து, 10 சதவீதம் வரி விதித்துள்ளது.
இதன்மூலம், 2023-ல் 35,000 பேரிலிருந்து 2025-ல் 250,000 பேராக வேலை செய்யும் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.