Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் படைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த மிரட்டல்

ஹமாஸ் படைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த மிரட்டல்

15 ஐப்பசி 2025 புதன் 07:36 | பார்வைகள் : 277


ஹமாஸ் படைகள் தாமாகவே ஆயுதங்களைக் கைவிட மறுத்தால், நாங்கள் அவர்களை நிராயுதபாணியாக்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன நாடு அமையும் வரையில் ஆயுதங்களைக் கைவிட முடியாது எனவும், இந்த விவகாரம் குறித்து மத்தியஸ்தர்களுடன் விரிவான விவாதம் முன்னெடுக்கப்படும் என்றும் ஹமாஸ் முன்னரே விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைகளுக்கும் இடையிலான 20 அம்ச ஒப்பந்தத்தின் அடுத்த கட்டங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொருட்டு, ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஆயுதங்களைக் கைவிட மறுத்தால், நாங்கள் அவர்களை நிராயுதபாணியாக்குவோம். அது மிக விரைவில் நடக்கலாம், அத்துடன் வன்முறையும் பயன்படுத்தப்படலாம் என்றார். ஹமாஸ் படைகளுடன் இது தொடர்பில் தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் அதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹமாஸ் படைகளை நிராயுதபாணியாக்குவதில் யார் ஈடுபடுவார்கள் அல்லது அதில் அமெரிக்கப் படைகளும் ஈடுபடுத்தப்படுமா என்பது குறித்து ட்ரம்ப் விளக்கமளிக்க மறுத்துள்ளார்.

ட்ரம்பின் 20 அம்ச போர்நிறுத்தத் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் முக்கிய பகுதியாக ஹமாஸ் படைகள் ஆயுதங்களைக் கைவிடுவது இருந்தபோதிலும், ஹமாஸ் படைகள் இதுவரை அந்த திட்டத்தை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளது.

மேலும், பாலஸ்தீன அரசு அமைவதை ட்ரம்பும் அமெரிக்காவும் மறுத்து வரும் நிலையில், ஹமாஸ் படைகளின் கோரிக்கை ஏற்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனிடையே, ஹமாஸ் படைகள் இன்னும் தடுத்து வைத்துள்ள இஸ்ரேல் வீரர்களின் உடல்களை திருப்பித் தரத் தவறினால், காஸாவிற்கான உதவி விநியோகங்களைத் துண்டிக்க இருப்பதாக இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் செவ்வாயன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

ஒப்புக்கொண்டபடி சடலங்கள் திருப்பித் தரத் தவறினால், இரண்டாம் கட்டம் உடனடியாக தொடங்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதனிடையே, இஸ்ரேலால் ஒப்படைக்கப்பட்ட 45 பாலஸ்தீனியர்களின் உடல்களை காஸாவில் உள்ள ஒரு மருத்துவமனை பெற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்