மான்செஸ்டர் யூத ஆலயத் தாக்குதல்- சந்தேக நபர் மீண்டும் கைது

10 ஐப்பசி 2025 வெள்ளி 11:48 | பார்வைகள் : 205
மான்செஸ்டர் யூத ஆலயத் தாக்குதலில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 2ம் திகதி மான்செஸ்டர் ஹீட்டன் பார்க் ஹீப்ரு யூத ஆலயத்தில் நடந்த திடீர் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை 35 வயது ஜிஹாத் அலி-அமி என்ற நபர் நடத்திய நிலையில், அவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
யூத ஆலயத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து 30 வயது மதிப்புடைய சந்தேக நபர் பயங்கரவாத செயல்கள் செய்தல் மற்றும் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு காவல்துறை வடமேற்கு(CTPNW) அதே நபரை மான்செஸ்டர் விமான நிலையத்தில் வைத்து இரண்டாவது முறையாக கைது செய்துள்ளது.
தகவலை வெளியிடாமல் இருந்ததற்காக பயங்கரவாத சட்டம் 2000, பிரிவு 38-இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு இந்த கைதானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்போது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.