உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு குழுவின் விசாரணை துவங்கியது!

6 ஐப்பசி 2025 திங்கள் 11:11 | பார்வைகள் : 172
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு குழுவின்விசாரணை நேற்று துவங்கியது. அந்த குழு, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தது. சிறப்பு குழுவுக்கு தலைமை வகிக்கும் ஐ.ஜி., அஸ்ரா கார்க்கிற்கு உதவ, 10 போலீஸ் அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, “கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால், அதுபற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது,” என, வடக்கு மண்டல ஐ.ஜி.,யும், சிறப்பு புலனாய்வு குழுவான எஸ்.ஐ.டி., விசாரணை அதிகாரி அஸ்ரா கார்க் தெரிவித்தார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த மாதம், 27ம் தேதி இரவு, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 18 பெண்கள், 13 ஆண்கள், ஐந்து சிறுவர்கள், ஐந்து சிறுமியர் என, 41 பேர் பலியாகினர். மேலும், 110 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில், 106 பேர் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளதாகவும், தற்போது திருச்சி, மதுரை அரசு மருத்துவமனையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த, 3ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினர், வேலுச்சாமிபுரத்துக்கு நேற்று மதியம், 1:30 மணிக்கு வந்தனர்.
இதில், விஜய் பிரசார பஸ் நின்ற இடம், ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடம், சாலை இருபுறமும் நெரிசல் ஏற்பட்ட பகுதி, ஒடிந்து விழுந்த மரக்கிளை, திறந்தநிலை சாக்கடை போன்றவற்றை, 45 நிமிடம் பார்வையிட்டனர். கரூர் சைபர் கிரைம் எஸ்.ஐ., சுதர்சன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு மோகன்ராஜிடம், அஸ்ரா கார்க் விளக்கம் கேட்டறிந்தார்.
ஆய்வு குறித்து ஐ.ஜி., அஸ்ரா கார்க் நிருபர் களிடம் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்துள்ளோம். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால், இதுபற்றி வேறு எதுவும் கூற முடியாது. சிறப்பு புலனாய்வு குழுவில் இரண்டு எஸ்.பி.,க்கள், ஒரு ஏ.டி.எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி.,க்கள், ஐந்து இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஸ் ஓட்டுநர் மீது வழக்கு
த.வெ.க., தலைவர் விஜய், செப்., 27ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அங்கிருந்து பிரசார பஸ்சில், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க சென்றார். கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் பகுதியில், பிரசார பஸ் சென்ற போது, த.வெ.க., தொண்டர்கள் சென்ற டூ - வீலர்கள் மீது மோதியது. அதில், தொண்டர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. அதேசமயம் இது தொடர்பான வீடியோ பரவியது. இந்நிலையில், பிரசார பஸ் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பிரசார பஸ் ஓட்டுநர் மீது, இரு பிரிவுகளில், வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1