Paristamil Navigation Paristamil advert login

தேசிய பாதுகாப்பு படையினருடன் ஆதவ் டில்லி பயணம்: த.வெ.க.,வின் அடுத்த கட்ட மூவ் என்ன?

தேசிய பாதுகாப்பு படையினருடன் ஆதவ் டில்லி பயணம்: த.வெ.க.,வின் அடுத்த கட்ட மூவ் என்ன?

3 ஐப்பசி 2025 வெள்ளி 12:37 | பார்வைகள் : 171


தேசிய பாதுகாப்பு படையினருடன், ஆதவ் அர்ஜுனா டில்லி சென்றுஉள்ளதால், திடீர் பரபரப்பு எழுந்துள்ளது.

த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, கரூர் மாவட்ட த.வெ.க., நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் செய்தி தொடர்பு பிரிவு துணை பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தேடுவதை அறிந்து, இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

புதுச்சேரியில், போலீஸ் பாதுகாப்பு மிகுந்த முக்கிய புள்ளி ஒருவரின் அரசு பங்களாவில், ஆனந்த் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது. அவரை கைது செய்ய முடியாமல், தமிழக போலீசார் புதுச்சேரியை சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக, த.வெ.க., பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தன் சமூக வலைதள பக்கத்தில், ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.

அதில், 'இலங்கை, நேபாளம் போல மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்திய இறையான்மைக்கு எதிராக கருத்து பதிவிட்டதாக கூறி, அவர் மீது ஐந்து பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் ஏற்பாடு செய்த தனி விமானத்தில், சென்னையில் இருந்து, கடந்த 1ம் தேதி ஆதவ் அர்ஜுனா டில்லி சென்றுள்ளார்; அவருடன் ஐந்து பேரும் சென்றுள்ளனர். இதில் இரண்டு பேர், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள். இவர்கள், விஜய் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக வழக்குப்பதிவான நிலையில், தேசிய பாதுகாப்பு படை வீரர்களுடன், ஆதவ் அர்ஜுனா டில்லி சென்றுள்ளது, புது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உச்ச நீதிமன்றத்தை த.வெ.க., நாடவுள்ளது. இது தொடர்பாக, மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கவே, ஆதவ் அர்ஜுனா டில்லி சென்றுஉள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

காங்கிரஸ் ஆதரவு சீனியர் வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில் ஆகிய இருவரையும், தங்கள் தரப்புக்கு வாதாட வைக்க ஆதவ் அர்ஜுனா முயற்சிக்கிறார்.

இருவரும் ஒப்புக் கொள்ளாதபட்சத்தில், வேறு ஒரு சீனியர் வழக்கறிஞரை நாட உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய புள்ளியின் நிர்பந்தத்தில், அவரை சந்திக்க ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது.


பிரசார வாகனத்தை மாற்றும் விஜய்

த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத் திற்காக, மஞ்சள், சிவப்பு நிறம் கலந்த, கட்சி கொடி வண்ணத்தில், வாகனம் தயார் செய்யப்பட்டது. இதில், கழிப்பறைகள், ஓய்வறைகள், உணவருந்தும் கூடம், சோபா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அகல மான 'கேரவேன்' வாகனம், குறுகிய சாலையை அடைத்து கொண்டு நிற்பதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது எனவும் இதுவும் உயிர் பலிக்கு காரணம் எனவும், அரசு செய்தி தொடர்பாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா கூறியிருந்தார். இதையடுத்து, 'டெம்போ டிராவலர் ' வேனை பிரசாரத்துக்கு பயன்படுத்த, விஜய் முடிவெடுத்துள்ளார். இந்த வாகனத்திற்கும், விஜய் ஏற்கனவே பயன்படுத்தும் வாகனத்திற்கும், நேற்று முன்தினம், ஆயுத பூஜையன்று, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பூஜை போடப்பட்டது

 

வர்த்தக‌ விளம்பரங்கள்