குஜராத் கடல் எல்லையில் ராணுவ முகாம்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் கடும் எச்சரிக்கை!

3 ஐப்பசி 2025 வெள்ளி 11:37 | பார்வைகள் : 155
குஜராத் கடல் எல்லையையொட்டிய, சர் க்ரீக் பகுதியில் ராணுவ உள்கட்ட மைப்புகளை விரிவுப்படுத்தி வரும் பாகிஸ்தானுக்கு, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்; ஏதேனும் அத்துமீற முயற்சித்தால் ஆபத்தை சந்திக்க நேரிடும், என எச்சரித்துள்ளார் . குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு இடையே, 96 கி.மீ., நீளமுள்ள கடற்கழி பகுதியே 'சர் க்ரீக்' என அழைக்கப்படுகிறது. இதன் மையப் பகுதியில் தான் சர்வதேச எல்லை இருக்கிறது என இந்தியா சொல்கிறது.
ஆனால் பாகிஸ்தானோ, சர் க்ரீக்கின் கிழக்கு கரையை ஒட்டி, இந்தியாவுக்கு அருகில் சர்வதேச எல்லை இருப்பதாக கூறி வருகிறது. இதனால், சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும், சர் க்ரீக் எல்லை பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், சர் க்ரீக் எல்லையையொட்டிய கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த ஆயுத பூஜை விழாவில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பங்கேற்றார். விழாவில், 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலின் போது இந்தியாவுக்கு பக்கபலமாக இருந்த முக்கிய ஆயுதங்களுக்கு, அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
இதை தொடர்ந்து, அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தேசம் விடுதலை பெற்று 78 ஆண்டுகள் ஆகியும், சர் க்ரீக் எல்லை பிரச்னை துாண்டப்பட்டு வருகிறது. பேச்சுகள் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண, நம் நாடு பல முறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் அதற்கு ஒத்துழைக்கவில்லை; அவர்களின் நோக்கமும் தெளிவாக இல்லை. சமீபகாலங்களாக சர் க்ரீக் எல்லையையொட்டிய பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்கட்டமைப்புகளை அதிகரித்து வருவதன் மூலம், தற்போது அவர்களின் நோக்கம் என்னவென்பது தெரிந்து விட்டது.
நம் ராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் இணைந்து தேசத்தின் எல்லைகளை காத்து வருகின்றன. சர் க்ரீக் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ஏதேனும் அத்துமீற முயன்றால், நம் நாடு அமைதியாக இருக்காது; வலுவான பதிலடியை தரும். வரலாறு மற்றும் புவியியல் மாறும் அளவுக்கு அந்த பதிலடி இருக்கும்.
கடந்த 1965ல் நடந்த போரின்போது, லாகூர் வரை செல்லும் திறன் நம் ராணுவத்திற்கு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது. 2025ல் நம் ராணுவத்தின் பலம் அதை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. சர் க்ரீக் எல்லை வழியாக ஒரு பாதை கராச்சி வரை செல்கிறது என்பதை பாகிஸ்தான் மறந்து விடக்கூடாது.
பயங்கரவாதமோ அல்லது வேறு விதமான பிரச்னைகளோ எதுவாயினும் சரி, அதை எதிர்கொண்டு முறியடிக்கும் திறன் நம் நாட்டிற்கு இருக்கிறது.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, லே முதல் சர் க்ரீக் வரை நாட்டின் எல்லை பாதுகாப்பு முறைகளை கடந்து பாகிஸ்தான் அத்துமீற முயன்றது. ஆனால், நம் பாதுகாப்பு படைகள் கொடுத்த தக்க பதிலடியால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. நம் ஆயுதப்படைகள், பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு அமைப்பை முழுமையாக தகர்த்தன.
எங்கு, எப்போது, எப்படி வேண்டுமென்றாலும் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் நம் முப்படைகள் உலகிற்கு உணர்த்தின.
முப்படைகளின் கூட்டு முயற்சியால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை அசாத்தியமான நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டது.
அந்த நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டது. ஆனால், நாம் அதை செய்யவில்லை. முழு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தோம்; பயங்கரவாதம் மட்டுமே இலக்கு என்பதை நிரூபித்தோம். அந்த வகையில் ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை முழு வெற்றி பெற்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான அந்நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1