Paristamil Navigation Paristamil advert login

பொறுப்பு பெற்றால் மட்டும் போதாது; களத்தில் வேலை பார்க்கணும்: சொல்கிறார் உதயநிதி

பொறுப்பு பெற்றால் மட்டும் போதாது; களத்தில் வேலை பார்க்கணும்: சொல்கிறார் உதயநிதி

20 ஆவணி 2025 புதன் 14:02 | பார்வைகள் : 1830


திமுக இளைஞரணியில், ஐந்து லட்சம் நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். அதிமுக- பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஹிந்தி புகுந்து விடும். அதனால், 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் இலக்கை நிறைவேற்ற வேண்டும்,” என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், உதயநிதி பேசியதாவது: தமிழகம் முழுதும் நகர, பேரூர் வார்டுகள், ஊராட்சி கிளைகள்தோறும் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம்.

இப்படி நியமித்தால், இளைஞரணி நிர்வாகிகள் மட்டுமே, ஐந்து லட்சம் பேர் வருவர். இந்தியாவிலேயே அசைக்க முடியாத ஓர் அமைப்பாக, திமுக இளைஞரணி இருக்கப்போகிறது.

ஒரு கட்சியில் இளைஞரணி என்ற தனி அமைப்பை, இந்தியாவிலேயே முதலில் ஆரம்பித்தவர் கருணாநிதி. அவரால் உருவாக்கப்பட்ட எத்தனையோ அணிகள், கட்சியில் இருந்தாலும், முதன்மை அணியாக இருப்பது இளைஞரணி.

இந்தியாவில் பல கட்சிகள், பூத் கமிட்டி அமைக்க சிரமப்படுகிற நேரத்தில், ஓட்டுச்சாவடிக்கு ஒரு இளைஞரணி அமைப்பாளரை நியமித்து இருக்கிறோம் என்றால், அது நம் சாதனை.'

பொறுப்பு வாங்கி விட்டோம்; வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டோம்; நான்கு பிளக்ஸ் பேனர் வைத்து விட்டோம்; விளம்பரம் கொடுத்து விட்டோம் என, இருக்கக் கூடாது. அனைவரும் களத்தில் இறங்கி, வேலை பார்க்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

'ஓரணியில் தமிழகம்' வாயிலாக, இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இதைப் பார்த்து, அதிமுகவுக்கும், பாஜவுக்கும் பயம் வந்துவிட்டது. பழனிசாமி எங்கு சென்றாலும், ஓரணியில் தமிழகம் பற்றி தான் பேசுகிறார். பதற்றத்தில் தான் அவர் அப்படி பேசுகிறார்.

அதிமுக- பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மீண்டும் ஹிந்தி புகுத்தப்படும்; தொகுதி மறுவரையறை வரும்; புதியக் கல்வி கொள்கை வரும். எனவே, பாஜ- அதிமுகவை வீழ்த்தும் போரில், நம் இளைஞர் அணி முன்வரிசையில் நிற்க வேண்டும்.

வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேலாக, திமுக வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்