அரசியல் சாசனத்தை சுப்ரீம் கோர்ட் மாற்றி எழுத முடியாது ! மத்திய அரசு வாதம்

20 ஆவணி 2025 புதன் 12:02 | பார்வைகள் : 1422
சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, 'பேப்பர், பேனாவை வைத்து உச்ச நீதிமன்றத்தால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுத முடியாது' என, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
கவர்னர் ரவி ஒப்புதல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு, தமிழக கவர்னர் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்த்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, 'மசோதாக்கள் மீது கவர்னர்கள் ஒரு மாத காலத்திற்குள்ளும், ஜனாதிபதி அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதம் மனுவாக மாற்றப்பட்டு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அமர்வு விசாரித்து வருகிறது.
ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, மனு மீது, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
'ஜனாதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பிலேயே விரிவான பதில் இருப்பதால், இந்த மனுவை விசாரிக்க தேவையில்லை' என, தமிழக மற்றும் கேரள அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தன.
அவசியம் இல்லை இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என, தமிழக, கேரள தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதை தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதம்:
உச்ச நீதிமன்ற தீர்ப்பால், அரசியலமைப்பின் செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்னைகள் எழுந்தால், அது தொடர்பாக விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கடிதம் எழுத முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
தமிழக அரசின் மனு மீது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொறுத்தவரை, கவர்னர் மற்றும் ஜனாதிபதி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த அரசியலமைப்பு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அதனால் தான், ஜனாதிபதி இந்த கடிதத்தை எழுதி உள்ளார். நீதிமன்ற வழிகாட்டுதலை எதிர்பார்ப்பது தான் ஜனாதிபதியின் நோக்கம். எனவே, இது விசாரணைக்கு உகந்தது தான்.
மேலும், ஒரு மசோதா மீது முடிவெடுக்க குறிப்பிட்ட காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்திருக்கிறது. அவ்வாறு உச்ச நீதிமன்றத்தால் செய்ய முடியுமா? அதற்கான அதிகாரங்கள் என்ன என்று தான் ஜனாதிபதி கேட்டிருக்கிறார். இதற்கு, உச்ச நீதிமன்றம் தாராளமாக பதிலளிக்கலாம்.
தீர்ப்புக்கு எதிரானது இது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும், முந்தைய தீர்ப்பின் வாயிலாக சட்டசபை மற்றும் பார்லிமென்டின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
அதாவது, கையில் பேப்பர் மற்றும் பேனாவை எடுத்துக்கொண்டு அரசியல் சாசனத்தை திருத்தும் அளவிற்கு உச்ச நீதிமன்றம் சென்று இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
நேற்றைய அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை நடக்கிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1