Paristamil Navigation Paristamil advert login

டெங்கு, கொரோனா பரவல்; மாணவர்கள் மீது கவனம் அவசியம்

டெங்கு, கொரோனா பரவல்; மாணவர்கள் மீது கவனம் அவசியம்

10 ஆனி 2025 செவ்வாய் 11:13 | பார்வைகள் : 2150


தமிழகத்தில் டெங்கு, கொரோனா, இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் இருப்பதால், பள்ளி மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறைக்கு, பொது சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் 20 பேர் வரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, 219 பேர் சிகிச்சையில் இருக்கும் நிலையில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பு நடவடிக்கை


அதேபோல, டெங்கு காய்ச்சலால், 8,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இன்ப்ளூயன்ஸா வகை காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதற்கிடையே, திடீர் மழைபொழிவு, வெப்பநிலை அதிகரிப்பு என, தட்பவெப்ப நிலை மாறுபட்டு வருகிறது. இதனால், காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

அத்துடன், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்கும்படி, மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு, அந்தந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:


மாநிலத்தில் பரவும் காய்ச்சல்களை தொடர்ந்து கண்காணித்து, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மருத்துவ முகாம்


தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மாணவர்களுக்கு எளிதில் காய்ச்சல் தொற்று ஏற்படும்.

ஒரு மாணவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், மற்றவர்களுக்கும் எளிதில் பரவும். எனவே, மாணவர்கள் காய்ச்சலில் பாதிக்கப்பட்டால், அவர்களை வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்த வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், பள்ளி வளாகம் துாய்மைப்படுத்தப்படுவதுடன், உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி, மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்