Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தொழிநுட்பப் பிதாமகர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ்

தொழிநுட்பப் பிதாமகர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ்

24 மாசி 2014 திங்கள் 15:33 | பார்வைகள் : 18421


கணனியின் செயல்பாட்டினை முழுவதும் கைக்குள் அடக்கிவிட்ட மாமனிதர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இன்று உலகமே கொண்டாடும் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்சின் கதை மிகவும் சுவாரசியமானது.

தொழில்நுட்ப உலகின் தவப்புதல்வனான ஸ்டீவ் பால் ஜாப்ஸ், 1955ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி கல்லூரி மாணவ தம்பதிக்கு பிறந்தார், பிறகு இவரை கிலாரா- பால் ஜாப்ஸ் தம்பதியினர் தத்து எடுத்தனர்.

சிறுவனாக இருக்கும் போதே, மின்னணு பொருட்களுடன் தான் விளையாடிக் கொண்டிருப்பாராம். அப்படி தான் இவருக்கும், தொழில்நுட்பத்துக்குமான உறவு ஆரம்பமானது என்று சொல்லலாம்.

எப்போதுமே தனிமையை விரும்பும் ஜாப்ஸ், எதையுமே வித்தியாசமாக செய்யும் பழக்கம் உடையவர் என அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார்.

மற்ற மாணவர்கள் எல்லாம் ஒய்வு நேரத்தை மைதானங்களில் செல்விடுவார்கள் என்றால், உயர்நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே ஜாப்ஸ், எச் பி நிறுவனத்தில் உரைகளை கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இங்கு தான் அவருக்கு ஆப்பிளின் மற்றொரு நிறுவனரான ஸ்டீவ் வாஸ்னியாக்கை சந்திக்கும் வாய்ப்பு உண்டானது.

இருவருக்கும் தொழில்நுட்ப ஆர்வம் இருந்ததால் சிறந்த நண்பர்காள மாறினர், வாஸ்னியாக் கணனி விடயத்தில் புலியாக திகழ்ந்ததால், இருவருக்குமான நட்பு வலுப்பெற்றது.

பின் 1972ல் கல்லூரியில் சேர்ந்த ஜாப்சுக்கு, படிப்பில் நாட்டமில்லை, எனவே அடுத்த ஆண்டே வீடியோ கேமில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்த அட்டாரியில் வேலைக்கு சேர்ந்து விட்டார்.

அதிலும் ஈடுபாடு இல்லாததால், தன் நண்பர் வாஸ்னியாக் நடத்திக் கொண்டிருந்த கணனி கிளப்புடன் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அந்த காலத்தில் கணனி என்பது ஒரு பெரிய வீட்டின் அளவு இருக்கும், எனவே அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் எளிமையான சாதனத்தை உருவாக்குவதே ஜாப்சின் நோக்கமாக இருந்தது.

ஜாப்ஸ், ‘பீட்டில்ஸ் இசைகுழு’வின் பரம ரசிகர் என்பதால் பீட்டில் பாடல் ஒன்றின் பெயரான ஆப்பிள் என்பதையே நிறுவனத்துக்கு பெயராக வைத்து விட்டார்.

666 டொலருக்கு ஆப்பிள் 1 கணனியை அறிமுகம் செய்த கையோடு, மூன்று ஆண்டுகள் கழித்து ஆப்பிள் 2 கணனியை அறிமுகம் செய்தனர்.

ஆப்பிளின் வடிவமைப்பு எளிமையாக பயன்பாட்டுத் தன்மை மிக்கதாக இருந்ததால் விற்ப‌னையும் அதிகரித்தது, நிறுவனமும் காலூன்றியது.

பின் 1984-ம் ஆண்டும் ஜாப்ஸ் புகழ்பெற்ற மேக்கின்டாஷ் கணனியை அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் உலகை மேக் கணனிகள் ஆக்கிரமிக்க தொடங்கியதால், ஆப்பிள் சரிவை சந்தித்தது.

இதற்கிடையே ஜாப்ஸ் 1985ல் ஆப்பிளில் இருந்து விலகி, நெக்ஸ்ட் கணனி என்னும் தனி நிறுவனத்தை துவக்கினார், அந்த‌ நிறுவனம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

அடுத்த பதினோறு ஆண்டுகள் ஜாப்ஸை உலகம் மறந்தே விட்டது. இடைப்பட்ட காலத்தில் விண்டோஸ் சக்கை போடு போட தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்காத ஆப்பிள் திண்டாடி தடுமாறியது.

ஆப்பிள் விற்பனை சரிந்து அதன் பங்குகளும் வீழ்ச்சி அடைந்த நிலையில் நஷ்டத்தில் தள்ளாடும் நிறுவன‌த்தை தூக்கி நிறுத்தும் கடைசி முயற்சியாக மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸிடமே ஆப்பிள் தஞ்சமடைந்தது.

ஆனால் ஜாப்ஸால் கூட ஆப்பிளை காப்பாற்ற முடியாது, ஆப்பிளின் காலம் முடிந்து விட்டது என்றே பலரும் நம்பினர்.

ஒரு பக்கம் நஷ்டம் இன்னொரு பக்கம் வேறு திசையில் சென்றுவிட்ட கணனி உலக‌ம் என்ற‌ சூழ்நிலையில் தான் ஜாப்ஸின் இரண்டாவது இன்னிங்கஸ் ஆரம்பமானது.

பின் அசத்தலான ஐமேக் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்து திரும்பி பார்க்க வைத்தார்.

எல்லோரும் கம்ப்யூட்டர்களிலேயே கவனம் செலுத்தி கொண்டிருந்த காலத்தில் யாருமே எதிர்பாராத வகையில் எம்பி3 வடிவில் பாடல்களை கேட்க உத‌வும் சாதனமான ஐபாடை (iPod) அறிமுகம் செய்தார், அவ்வளவு தான் அமெரிக்காவும் அகில உலகமும் ஐபாடு மூலம் ஆப்பிள் வ‌சமானது.

எல்லோரும் ஐபாட் பற்றி பேசிகொண்டிருந்த போது, செல்போன்கள் செல்லும் திசையை புரிந்து கொண்டு ஐபோனை அறிமுகம் செய்தார்.

டச் ஸ்கிரின் வசதியோடு வந்த அதன் எளிமையும் கணனியின் செயல்திறனும் ஐபோனை(iPhone) சூப்பர் ஹிட்டாக்கியது.

பிளாக்பெரி போன்றவை சாதிக்க முடியாததை ஐபோன் சாதித்து. ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையை உருவாக்கி சாதனை படைத்தது.

தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை உருவாக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜாப்ஸ் புற்றுநோயால் 2011ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதி காலமானார்.

அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும், அவரது கண்டுபிடிப்புகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்