Paristamil Navigation Paristamil advert login

தொலைந்து போன ஒருவன்..!!

தொலைந்து போன ஒருவன்..!!

18 மாசி 2018 ஞாயிறு 13:49 | பார்வைகள் : 14612


உங்களால்

புறக்கணிக்கப் படுவேனோ
எனும்
பயம் எனக்கு.
 
அதனால் தான்
என்
வெள்ளைச்சிறகுகளுக்கு
உள்ளே இருக்கும்
கழுகுக் கால்களை
காட்ட மறுக்கிறேன்.
 
எனக்குள் வலி வருமோ
எனும் கிலியில் தான்,
என்
நிஜத்தின் நிழலைக் கூட
உங்கள்
விழி விழா தேசத்தில் தான்
விழ வைத்துக்
கொண்டிருக்கிறேன்.
 
புன்னகைப் பனிக்கட்டிகளை
என்னிரு உதடுகள்
ஏந்திப் பிடித்திருந்தாலும்,
சில
எரிமலைச் சிந்தனைகள்
உள்ளே எரிந்துகொண்டு தான்
இருக்கின்றன !
 
எப்போதேனும் காட்டவேண்டும்
என்
உண்மை முகத்தை,
போலித்தனமில்லா
ஓர்
நண்பனிடமாவது !.
 
அதற்கு முன்
தேட வேண்டும் !
எத்தனை முகமூடிகளுக்குப் பின்
என் முகம்
முடங்கிக் கிடக்கிறதென்று !.

வர்த்தக‌ விளம்பரங்கள்