மழை
28 வைகாசி 2016 சனி 18:10 | பார்வைகள் : 14424
நகரத்திற்கு வெளியே
செம்பருத்திப் பூக்களுக்கு
பாலூட்டிக்கொண்டிருக்கிறது
வைகறை
நகரத்திற்கு வெளியே
காளான்களின் நிழலில்
பிள்ளையார் எறும்புகள்
அமைதியாக ஊர்ந்து கொண்டிருக்கின்றன
நகரத்திற்கு வெளியே
மஞ்சள் மூக்குப் பறவை
அதன் இசையை
வண்ணங்களால் தீற்றிக்கொண்டிருக்கிறது
நகரத்திற்கு வெளியே
நிர்வாணமாக நீந்தும் சிறுவன்
ஒரு தாமரையோடு
கரையேறுகிறான்
நகரத்திற்கு வெளியே
மேகங்கள்
தாய்வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன
நகரத்திற்கு வெளியே
நிலவு
பூமியில்
பாய்விரித்துப் படுத்துத் தூங்குகிறது
உன் கையகல நிலம் போதும்
நானும்
நிலவோடு
அங்கேயே தூங்கிவிடுவேன்
என் நகரத்திற்கு வெளியே
- பழநிபாரதி






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan