ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதிப்பு
29 ஆனி 2026 திங்கள் 13:23 | பார்வைகள் : 179
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் கப்பல் போக்குவரத்து மீண்டும் மந்தநிலையில் காணப்படுவதால் திங்கட்கிழமை 29.06.2026 மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ப்ரெண்ட் மசகு எண்ணெய் (Brent crude) விலையானது 0.672 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 72.51 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் விலை 1.03 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 69.94 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரியில் ஈரானுடன் அமெரிக்க - இஸ்ரேல் மோதல் தொடங்கியதிலிருந்து, ஹோர்முஸ் நீரிணை வழியிலான மசகு எண்ணெய் போக்குவரத்து கடந்த வாரம் அதன் உச்சகட்ட அளவை எட்டியது.
இதன் காரணமாக, கடந்த வாரத்தில் ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை 10.6% சரிவைச் சந்தித்ததுடன், இது தொடர்ச்சியான மூன்றாவது வாராந்திர வீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளது.
இருப்பினும், கடந்த வியாழக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணையில் கட்டார் நாட்டுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல் உட்பட பல கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையடுத்து, அந்நீரிணை வழியில் கப்பல் போக்குவரத்து மந்தமடைந்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே இடைக்கால அமைதி உடன்படிக்கை கையெழுத்தான பிறகு ஏற்பட்ட மிக மோசமான பதற்ற நிலையை உருவாக்கியதோடு இரு நாடுகளின் தாக்குதல்களுக்கும் வழிவகுத்தன.
"பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய் விநியோகம் மிக விரைவாக வழமைக்குத் திரும்பும் என்ற சந்தையின் எதிர்பார்ப்பை இப்போது மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று ANZ வங்கியின் ஆய்வாளர்கள் தங்களது குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, எண்ணெய் விலை மேலும் உயர்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக, வளைகுடா பகுதியில் அண்மைக்காலமாக நிலவி வரும் மோதல்களை நிறுத்தவும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சர்ச்சை குறித்து கட்டாரில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக 'ஆக்ஸியோஸ்' (Axios) செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
மத்திய கிழக்கு நாடுகள், தங்களது இடைக்கால உடன்படிக்கைக்கு முன்னதாக எண்ணெய், எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை கணிசமாக அதிகரித்திருந்தன.
இதனால் சரக்குகளை விரைவாக நகர்த்தும் நோக்கில், சவூதி அரேபியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான அராம்கோ (Aramco), ஹோர்முஸ் நீரிணைக்கு மேற்கே அமைந்துள்ள தனது ராஸ் தனூரா (Ras Tanura) முனையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (26) முதல் மசகு எண்ணெய் ஏற்றும் பணிகளை மீண்டும் தொடங்கியது.
இந்த முனையத்தின் செயற்பாடுகள் கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
"அமெரிக்கா - ஈரான் உடன்படிக்கை எண்ணெய் சந்தையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்திருந்தாலும், கப்பல்களின் நெரிசல், சேதமடைந்த உள்கட்டமைப்புகள் மற்றும் உற்பத்தி நிறுத்தங்கள் காரணமாக இயல்பான எண்ணெய் விநியோக ஓட்டம் இன்னும் தடைப்பட்டே இருக்கிறது" என்று ANZ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், "எண்ணெய் விநியோகமானது மோதலுக்கு முந்தைய நிலையை எட்டுவதற்கு இந்த ஆண்டின் எஞ்சிய நாட்கள் முழுவதும் தேவைப்படலாம்" என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan