ராகுலின் செயலாளராக நடித்து ரூ. 10 லட்சம் மோசடி
29 ஆனி 2026 திங்கள் 10:30 | பார்வைகள் : 307
காங்கிரஸ் எம்பி ராகுலின் செயலாளர் என நடித்து ஹரியானா காங்கிரஸ் நிர்வாகியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர் சஞ்சீவ் என்பவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த ஜனவரி 24ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் ராகுலின் செயலாளர் கனிஷ்க் சிங்'என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் பிரிவு சார்பில் சண்டிகரில் ஒரு பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஹோட்டல் முன்பதிவு மற்றும் இதர ஏற்பாடுகளுக்கு நிதி உதவி தேவைப்படுவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் சஞ்சீவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
கட்சியின் உயர் பொறுப்பில் இருப்பவர் கேட்கிறார் என்று நம்பிய சஞ்சீவ் மற்றும் மற்றொரு காங்கிரஸ் தலைவரான பவன் சர்மா ஆகிய இருவரும் தலா ரூ. 5 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாயைத் திரட்டினர். அதன்பிறகு, சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்று, அங்கு தீபக் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபரிடம் 10 லட்சம் ரூபாயைச் சஞ்சீவ் கொடுத்துள்ளார். பணம் கொடுப்பதற்கு முன்பு அந்த நபரின் புகைப்படத்தையும் அவர் தனது மொபைலில் எடுத்துள்ளார்.
மறுநாள், அதே முகாமிற்காக மேலும் 5 லட்சம் ரூபாய் தருமாறு அந்த நபர் சஞ்சீவிடம் மீண்டும் கேட்டுள்ளார். சஞ்சீவ் அதற்கு மறுப்புத் தெரிவித்தவுடன், அந்த நபர் அவரது அழைப்புகளுக்குப் பதிலளிப்பதை நிறுத்திவிட்டார். இதனால் சந்தேகமடைந்த சஞ்சீவ், கட்சித் தலைமைகளிடம் விசாரித்தபோது, அப்படி ஒரு பயிற்சி முகாமிற்கு எவ்விதத் திட்டமும் இடப்படவில்லை என்பது தெரியவந்தது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சஞ்சீவ், ஆரம்பத்தில் ஏற்பட்ட அவமானம் காரணமாக உடனடியாகப் புகார் அளிக்கவில்லை. உத்தரகண்ட் போலீசார் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை செய்திகளில் படித்த பிறகு, தற்போது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan