நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பெற்றவரின் திருமணத்தை நடத்த மறுத்த மேயர்: தம்பதியருக்கு €6,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!!
24 ஆனி 2026 புதன் 22:33 | பார்வைகள் : 429
ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, Seine-et-Marne மாவட்டத்தின் Meaux நீதிமன்றம், Chessy நகராட்சிக்கு திருமணமான தம்பதியருக்கு 6,000 யூரோக்கள் அபராதத் தொகை (astreinte) வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மேயர், எதிர்கால மணமகனுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த OQTF (பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய உத்தரவு) காரணமாக, அந்தத் திருமணத்தை நடத்த மறுத்திருந்தார். ஆனால், தம்பதியருக்கு ஆதரவாக பல நீதிமன்றத் தீர்ப்புகள் வந்தபோதும் அவர் தனது முடிவை மாற்றவில்லை. நீதிமன்றம் மீண்டும் நகராட்சிக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.
2025 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த வழக்கில், 50 வயதுடைய பின்லாந்து பெண்ணும், 40 வயதுடைய அல்ஜீரிய ஆணும் திருமணம் செய்ய விரும்பினர். அந்த அல்ஜீரியருக்கு முன்பு OQTF உத்தரவு இருந்ததால், இது "போலி திருமணம்" என்று மேயர் சந்தேகித்து திருமணத்தை நடத்த மறுத்தார்.
Chessy நகராட்சியின் வழக்கறிஞர் Antoine Savignat "நீதிபதிக்கு வேறு வழியில்லை. இந்தத் தீர்ப்பு வருவது முன்கூட்டியே தெரிந்த விஷயம்தான். இனி முடிவு எடுப்பது சட்டமன்றத்தின் கையில் உள்ளது. தற்போதைய சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தில் அனைவரும் ஒருமித்துள்ளனர்." என தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து, Éric Ciotti தலைமையிலான Union des droites pour la République (UDR) கட்சியின் நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ள நிலையில் வெளியாகியுள்ளது. OQTF உத்தரவு பெற்றுள்ள வெளிநாட்டவர்களுடன் திருமணம் செய்வதைத் தடைசெய்யும் சட்ட முன்மொழிவு அங்கு விவாதிக்கப்பட உள்ளது.
OQTF மட்டும் திருமணத்தைத் தடுக்க முடியாது
2025 டிசம்பரில் நீதிமன்றம் தம்பதியருக்கு சாதகமாக உத்தரவிட்டது. 2026 ஜனவரியில், திருமணத்தை நடத்தத் தவறினால் நிதி அபராதமும் விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், மேயர் தனது மறுப்பைத் தொடர்ந்தார்.
Meaux அரசு வழக்கறிஞர் (Parquet) விசாரணைக்குப் பிறகு திருமணத்தைத் தடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. மணமகனுக்கு இருந்த OQTF ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. ஒருவர் சட்டவிரோதமாக பிரான்சில் தங்கியிருப்பது மட்டும் திருமணத்தை மறுப்பதற்கான சட்டபூர்வ காரணமாகாது என்று தெரிவித்தார்.
மேயரும் அவரது துணை மேயர்களும் ராஜினாமா செய்ய முயன்றனர். 2025 டிசம்பர் மாதத்தில், திருமணத்தை நடத்த வேண்டிய நிலையைத் தவிர்க்க, மேயரும் அவருடன் இருந்த ஏழு துணை மேயர்களும் தங்களது நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். ஆனால், Seine-et-Marne மாகாண நிர்வாகம் (Préfecture) அந்த முயற்சியை நிராகரித்தது.
இறுதியில் திருமணம் நடைபெற்றது
பல மாதங்கள் நீண்ட சட்டநடவடிக்கைகளுக்குப் பிறகு, திருமண அறிவிப்பு (publication des bans) வெளியிடப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஏப்ரல் 11 அன்று, 2026 உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Chessy நகர மேயர் Cyril Marsaud, அமைதியான முறையில் அந்தத் திருமணத்தை நடத்தினார்.
அவர், முன்னாள் மேயரின் துணை மேயராக இருந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்ட போதிலும், அவர் "எங்களுடைய கருத்து மாறவில்லை. எங்கள் பார்வையில் இந்தத் திருமணம் உண்மையானது அல்ல. ஆனால், சட்டம் எவ்வாறு கூறுகிறதோ அதன்படி செயல்பட்டோம்." என தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan