Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு - கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை

அவுஸ்திரேலியாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு - கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை

24 ஆனி 2026 புதன் 08:45 | பார்வைகள் : 146


அவுஸ்திரேலியாவில் மிகவும் ஆபத்தான H5N1 பறவைக்காய்ச்சல் பாதிப்பு 2 இடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த நாட்டில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அவுஸ்திரேலியாவிலிருந்து கோழி இறைச்சி மற்றும் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பப்புவா நியூ கினியா தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் முதல் இரண்டு பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது தெற்கு அவுஸ்திரேலியாவின் பௌலர்ஸ் பே (Fowlers Bay) பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கடல் பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் பறவைக்காய்ச்சல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லாத ஒரே கண்டமாக இருந்த அவுஸ்திரேலியாவில், தற்போது வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கோழிப்பண்ணை துறையில் இதுவரை வைரஸ் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், பப்புவா நியூ கினியாவின் இந்தத் தடை அவுஸ்திரேலியாவின் ஏற்றுமதிக்குச் சவாலாக மாறியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் மட்டும் அவுஸ்திரேலியாவிலிருந்து 44 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மதிப்பிலான கோழி உற்பத்திப் பொருட்களை பப்புவா நியூ கினியா கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் குறைவு என்றாலும், உலகளாவிய ரீதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விநியோகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவுஸ்திரேலிய அரசாங்கம் பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.