ஊழல் வழக்கில் கே.என்.நேருவுக்கு சிக்கல்: ஊழல் வழக்கை விசாரிக்க தமிழக அரசு முடிவு
24 ஆனி 2026 புதன் 07:45 | பார்வைகள் : 177
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான ஊழல் வழக்கில் கடந்த திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்ப பெறுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சித்துறையில் 2538 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் போன்ற பணி நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வழக்கு பதிய தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.
பின்னர், அதிமுக எம்பி இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கலானது.
வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கே.என், நேரு தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செயய்யப்பட்டன. ஆனால் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் வழக்கை ஜூன் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந் நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அவர் கூறியதாவது;
வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஆட்சியில் தாக்கலான மனுவை திரும்ப பெறுகிறோம். வழக்கை புதிய அரசு தொடர்ந்து நடத்த உள்ளதால் மனுவை திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டது. வேறு உள்நோக்கம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனால், ஆட்சி மாறினாலும் நடந்து முடிந்த விசாரணையை மாற்ற முடியாது. சுப்ரீம்கோர்ட் தீர்ப்புகள் இதற்கு உள்ளன. எனவே மறு ஆய்வு மனுவை திரும்ப பெறக்கூடாது என்று கே.என். நேரு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள், கடந்த அரசு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற அனுமதி கோரும் தற்போதைய அரசின் மனு ஆகியவற்றின் விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan