தி.மு.க., ஆட்சியில் கோவில்களை வணிக நோக்கில் மாற்ற முயற்சித்தனர்; அமைச்சர் ரமேஷ்
23 ஆனி 2026 செவ்வாய் 09:40 | பார்வைகள் : 152
கடந்த தி.மு.க., ஆட்சியில், குன்னுார் விநாயகர் கோவில் பணம் 10 கோடி ரூபாயில், வாகன நிறுத்துமிடம் கட்ட திட்டமிட்டதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: ஹிந்து சமய அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வருவாய், அதன் புனிதமான நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என, கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையே இருக்கக் கூடாது என்ற பா.ஜ.,வின் குரலாக தான், த.வெ.க., அரசும் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அரசின் இந்த நிலைப்பாடு, திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களோடு நிற்குமா அல்லது பள்ளி, கல்லுாரிகளுக்கும் இதேநிலை தானா என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் ரமேஷ்: கோவில்களின் வருமானம் கோவிலுக்கும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படும். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் அறிவிப்புகளை ஆய்வு செய்தோம்.
அந்தக் கோவில்களில், பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தங்குமிட வசதிகள் இல்லை. ஆனால், வருவாய் ஈட்டும் நோக்கத்துடன் மட்டுமே திருமண மண்டபம், வணிக வளாகங்கள் கட்டினர். இதற்கு நீதிமன்றங்களும் தடை விதித்துள்ளன.
தி.மு.க., ஆட்சியில், கோவில்களை வணிக நோக்கில் மாற்ற முயற்சிகள் நடந்தன. நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள விநாயகர் கோவிலில், கோவில் நிதி, 10 கோடி ரூபாயில், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை, தி.மு.க., அரசு அறிவித்தது.
இக்கோவிலுக்கு ஒட்டுமொத்தமாக மாதந்தோறும், 500 பக்தர்கள் தான் வருகின்றனர். அவர்களுக்கு கழிப்பறை கூட இல்லாத போது, பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் எதற்கு?கோவில் நிதியை பயன்படுத்தி, கோவில்களுக்கும், பக்தர்களுக்கும் பயன்படக்கூடிய மாற்றுத் திட்டங்களை உருவாக்குவோம் என, கவர்னர் உரையில் சொல்லியிருக்கிறோம். கல்வி நிலையங்கள், மருத்துவ வசதிகளை செய்து தர மாட்டோம் என்று சொல்லவில்லை.
பழனியில் சித்தா மருத்துவமனை கட்ட, மத்திய அரசு நிதி தர முன்வந்தது. ஆனால், அதை தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. இப்போது, பழனியில் சித்தா மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களுக்கு பயன்படுத்தும் திட்டங்களை தடுக்கவில்லை. கோவில் நிதியை வணிக நோக்கில் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.
தி.மு.க., - சேகர்பாபு: எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கை அடிப்படையில் தான், கோவில் நிதியில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டன. குன்னுாரில் உள்ள, 56 கோவில்களிலும் அடிப்படை வசதிகளை செய்வதற்கான வருமானத்தை அதிகரிக்கவே, நகராட்சியின் பரிந்துரை அடிப்படையில், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்தோம்.
அமைச்சர் ரமேஷ்: குன்னுார் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க, நகராட்சிக்கு குத்தகைக்கு கொடுத்திருக்கலாம்.அதிலிருந்து வரும் வருவாயை கொண்டு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யலாம்.
ஆனால், கோவில் நிதி 10 கோடி ரூபாயை எடுத்து, பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுவது தேவையற்றது. பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் கேட்கவில்லை. கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளையே கேட்கின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan