கட்டட அனுமதி கட்டணம் உயர்கிறது; 30 ஆண்டுக்கு பின் அரசு நடவடிக்கை
23 ஆனி 2026 செவ்வாய் 07:32 | பார்வைகள் : 212
கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் ஆய்வு, வளர்ச்சி கட்டணங்களை, 30 ஆண்டுகளுக்கு பின் உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., வாயிலாக கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதற்காக, தற்போது 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பங்ளை சமர்ப்பிக்கலாம்.
ஒற்றை சாளர முறை இணையதளத்தில், இதற்கான விண்ணப்பங்களை உள்ளீடு செய்யும்போது, அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்படும்.
அடுத்தகட்டமாக விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு செல்லும் நிலையில், கட்டண விபரங்கள் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன்படி, கட்டணம் செலுத்தியவுடன், ஒப்புதலுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இதில், விண்ணப்பங்கள் சரிபார்த்தலுக்கான கட்டணம், ஒரு சதுர மீட்டருக்கு, 1.50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இதே போன்று, வளர்ச்சி கட்டணம் சதுர மீட்டருக்கு, 5 ரூபாய் என்ற அளவில் உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் நிர் ணயிக்கப்பட்ட கட்டணங்களே தற்போதும் அமலில் உள்ளன. தற்போதைய சூழலுக்கு ஏற்ப, இந்த கட்டணங்களை உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில், சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள், இதற்கான பரிந்துரைகளை தெரிவித்தனர். ஆனால், அப்போது அமைச்சராக இருந்த சேகர்பாபு, கட்டண உயர்வுக்கு ஒப்புதல் தரவில்லை.
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கட்டட அனுமதி கட்டணங்கள் காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். இந்த கட்டண விகிதங்கள் மாற்றப்படாததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, விண்ணப்ப சரிபார்த்தல், வளர்ச்சி கட்டணம் போன்றவற்றை உயர்த்த திட்டமிட்டு இருக்கிறோம். தற்போது, சதுர மீட்டருக்கு, 1.50 ரூபாயாக உள்ள விண்ணப்ப சரிபார்த்தல் கட்டணத்தை, 5 ரூபாய் வரை உயர்த்த இருக்கிறோம்.
இதே போன்று, வளர்ச்சி கட்டணம், வரன்முறை கட்டணம், காப்புத்தொகை போன்றவையும் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான வரைவு அறிக்கை, தற்போது உயரதிகாரிகள் ஆய்வில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
வீடு விலை உயராது!
தமிழகத்தில் முந்தைய ஆட்சி காலத்தில், கட்டுமான திட்ட அனுமதியின்போது, கட்சி நிதி என்ற பெயரில், சதுர அடி அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி நிதி வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கட்சி நிதி வகையில், கட்டுமான நிறுவ னங்களுக்கு ஏற்பட்ட செலவு குறைந்துள்ளது. இந்நிலையில் கட்டண உயர்வை அமல்படுத்தும்போது, கூடுதல் செலவு ஏற்படாது. இதன் காரணமாக, கட்டண உயர்வை காரணமாக வைத்து, வீடுகள் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது என, வீட்டுவசதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan