Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாடு; ஒரே ஜிஎஸ்டி பதிவு: மத்திய அரசு பரிசீலனை

ஒரே நாடு; ஒரே ஜிஎஸ்டி பதிவு: மத்திய அரசு பரிசீலனை

23 ஆனி 2026 செவ்வாய் 06:27 | பார்வைகள் : 198


ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை' என்ற இலக்குடன் 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) அமைப்பில், மேலும் ஒரு முக்கிய சீர்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது பல மாநிலங்களில் தொழில் நடத்தும் நிறுவனங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக ஜி.எஸ்.டி., பதிவு பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது. இதை மாற்றி, நாடு முழுவதற்கும் பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் அடிப்படையிலான ஒரே ஜி.எஸ்.டி., பதிவை அறிமுகப்படுத்த கவுபா குழு பரிந்துரைத்து உள்ளது. இந்த பரிந்துரை, நடப்பு நிதியாண்டிலேயே அமல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், மத்திய அரசின் பரிசீலனையிலும் உள்ளது.

தற்போதைய முறையில், ஒரு நிறுவனம் பல மாநிலங்களில் செயல்பட்டால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி ஜி.எஸ்.டி., பதிவு மற்றும் தனித்தனி வரி அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதனால் செலவுகளும் நிர்வாக சுமைகளும் அதிகம். இந்த நிலையில், ஒரே பான் எண்ணை அடிப்படையாக கொண்ட தேசிய அளவிலான ஜி.எஸ்.டி., பதிவு முறை அறிமுகமானால், பல மாநிலங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கான வரி நடைமுறைகள் எளிதாகும் என கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டபோது, மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வந்த பல்வேறு மறைமுக வரிகள் ஒன்றிணைக்கப்பட்டன. மதிப்புக்கூட்டு வரி, சேவை வரி, மத்திய உற்பத்தி வரி, நுழைவு வரி உள்ளிட்ட பல வரிகள் ஜி.எஸ்.டி., அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. மேலும், ஐ.டி.சி., எனப்படும் உள்ளீட்டு வரி வரவு முறையின் வாயிலாக, ஒரு பொருளின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடரின் ஒவ்வொரு கட்டத்திலும் கூடுதல் வரி மீது மீண்டும் வரி விதிக்கப்படும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில், தொழில் நிறுவனங்களின் செலவுகளை மேலும் குறைத்து, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி நடைமுறையை உருவாக்கும் நோக்கில், கவுபா குழுவின் பரிந்துரைப்படி 'ஒரே நாடு; ஒரே ஜி.எஸ்.டி., பதிவு' என்ற அடுத்தக்கட்ட சீர்திருத்தத்தை அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

* பல மாநிலங்களில் செயல்படும் நிறுவனங் களுக்கு தனித்தனி ஜி.எஸ்.டி., பதிவுக்கு பதிலாக, ஒரே பான் எண் அடிப்படையில் பதிவு

* மாநில வாரியான வரி அறிக்கை தாக்கல் நடைமுறை குறையும்

* நிறுவனங்களின் செலவு மற்றும் நிர்வாக சுமை குறையும்

* 'ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை' கொள்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்

* பரிந்துரை தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது

* நடப்பு நிதியாண்டிலேயே அமல்படுத்தப்பட வாய்ப்பு

மத்திய அமைச்சரவை செயலராக பணியாற்றிய ராஜீவ் கவுபா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவே கவுபா குழு.

தொழில் செய்வதை எளிதாக்குதல், வரி நடைமுறைகளை சீரமைத்தல், முதலீட்டு சூழலை மேம்படுத்துதல் மற்றும் நிர்வாக சிக்கல்களை குறைத்தல் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய பல்வேறு சீர்திருத்தங்களை ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு இக்குழு பரிந்துரைகளை வழங்கி வருகிறது.