Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணை வாங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு

இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணை வாங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு

23 ஆனி 2026 செவ்வாய் 05:25 | பார்வைகள் : 239


மேற்காசியா போருக்கு பின், தன் நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணை, ஆகாஷ்தீர் வான்கவசம் ஆகியவற்றை வாங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்காசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும், தங்கள் நாட்டின் வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையை மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடுக்கிவிட்டுள்ளது. இதன் முதற்படியாக, இந்தியாவின் அதிநவீன ஆயுத அமைப்புகளான பிரமோஸ் 'சூப்பர்சோனிக் க்ரூஸ்' ஏவுகணை மற்றும் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவற்றை வாங்க அந்நாடு ஆர்வம்காட்டி வருகிறது.

இதற்கான இருதரப்பு பேச்சு ஆரம்பகட்டத்தில் இருந்தாலும், இது தொடர்பான செயல்பாடுகள் மிக வேகமாக நடந்து வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இது தொடர்பாக மத்திய அரசும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்காவின் 'தாட் மற்றும் பேட்ரியாட்' போன்ற பாதுகாப்பு அமைப்புகளை ஏற்கனவே பெற்றிருந்தாலும், ஆயுத கொள்முதலில் ஒரே நாட்டை சார்ந்திராமல், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிடம் இருந்து வாங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு செய்துள்ளது. இந்தியாவிடம் ஆயுதம் வாங்குவதால் அமெரிக்காவுடனான தன் உறவு பாதிக்கப்படாது என்றும் அந்நாடு கருதுகிறது.

இதன் வாயிலாக, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து பிரமோஸ் ஏவுகணையை வாங்கும் நான்காவது சர்வதேச நாடாக எமிரேட்ஸ் மாற உள்ளது. கடந்தாண்டு, நம் அண்டை நாடான பாக்., உடனான மோதலின்போது, இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்புகளான பிரமோஸ், ஆகாஷ்தீர் போன்றவற்றின் செயல்திறன்கள் உலக நாடுகளை வெகுவாக கவர்ந்தன. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ராணுவ பொருட்கள் ஏற்றுமதியில் 38,424 கோடி ரூபாயை கடந்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

பிரமோஸ் ஏவுகணை: இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய இந்த ஏவுகணை உலகின் அதிவேகமாக இயங்கும் 'சூப்பர் சோனிக் க்ரூஸ்' ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது தரை, கடல் மற்றும் வான் தளங்களில் இருந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது.

ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பு:

இது பெல் எனும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தால் முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பாகும். எதிரி நாடுகளின் ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் ட்ரோன் எனும் ஆளில்லா விமானங்களை ரேடார் வாயிலாக கண்டறிந்து தானாகவே சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது.