Paristamil Navigation Paristamil advert login

வெப்ப அலை: செவ்வாய்க்கிழமை மெட்ரோ பாதைகள், RER, Tram மற்றும் Transilien தொடருந்து சேவைகள் பாதிப்பு!!

வெப்ப அலை: செவ்வாய்க்கிழமை  மெட்ரோ பாதைகள், RER, Tram மற்றும் Transilien தொடருந்து சேவைகள் பாதிப்பு!!

22 ஆனி 2026 திங்கள் 22:12 | பார்வைகள் : 822


செவ்வாய்க்கிழமை நிலவும் கடும் வெப்பநிலையால், RER மற்றும் Transilien தொடருந்து பாதைகளில் ரயில்களின் வேகம் குறைக்கப்படலாம் அல்லது சில சேவைகள் ரத்து செய்யப்படலாம்.

தற்போது நிலவி வரும் வெப்ப அலை (Canicule) காரணமாக, போக்குவரத்து உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும், சேவைகள் தொடர்ந்து சிறந்த முறையில் இயங்குவதை உறுதி செய்யவும், பயணிகளின் பாதுகாப்பை நிலைநிறுத்தவும், Île-de-France Mobilités (IDFM) இன்று ஒரு சிறப்பு போக்குவரத்து திட்டத்தை அறிவித்துள்ளது. வெளிப்புறத்தில் அமைந்துள்ள தொடருந்து உள்கட்டமைப்புகளே அதிக ஆபத்தில் இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளது.

மெட்ரோ மற்றும் டிராம் பாதைகள் பாதிப்பு

மெட்ரோ சேவைகளில், குறிப்பாக 5, 6, 8 மற்றும் 13 ஆகிய பாதைகளில் பாதிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பிற்பகல் நேரங்களில் இப்பாதைகளில் ரயில்கள் மெதுவாக இயக்கப்படலாம் என IDFM தெரிவித்துள்ளது.

அதேபோல், T1, T2, T5 மற்றும் T6 டிராம் பாதைகளிலும் இதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். தொடருந்து தண்டவாளங்கள் கண்காணிப்பில்

RER A மற்றும் RER B பாதைகளில், வெப்பநிலையைப் பொறுத்து தொடருந்துகளின் இயக்க வேகம் குறைக்கப்படலாம்.

RER C, D, E பாதைகளிலும், Transilien H, J, K, L, N, P, R, U மற்றும் V பாதைகளிலும், சராசரியாக 10 தொடருந்துகளில் 9 தொடருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்,  கூடுதலாக சில தொடருந்துகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது என IDFM தெரிவித்துள்ளது. பேருந்து சேவைகள் மீது இந்த கடும் வெப்பம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RATP மற்றும் SNCF Réseau கண்காணிப்பு

RATP மற்றும் SNCF Réseau நிறுவனங்களின் பணியாளர்கள் தண்டவாள வலையமைப்பில் வெப்பநிலையின் தாக்கங்களை கண்காணிக்க நியமிக்கப்படுவர். குறிப்பாக வெளிப்புற தண்டவாளங்களில் ஏற்படக்கூடிய வளைவுகள் மற்றும் சேதங்களை கவனிக்க அவர்கள் சுற்றுப்பார்வை மேற்கொள்வார்கள். "அதிக ஆபத்து பகுதிகள்" என அடையாளம் காணப்பட்ட இடங்களில் சிறப்பு கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும்.

பயணிகளுக்கான அறிவுரை

IDFM, பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன் போக்குவரத்து நிலவரத்தை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு உதவுவதற்காக கூடுதல் பணியாளர்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.