Paristamil Navigation Paristamil advert login

மோடி ஆட்சியில் பயங்கரவாதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

மோடி ஆட்சியில் பயங்கரவாதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

22 ஆனி 2026 திங்கள் 05:51 | பார்வைகள் : 331


பிரதமர் மோடியின், 12 ஆண்டு கால ஆட்சியில், பயங்கரவாதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது,” என, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

சென்னையில் பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  அவர் அளித்த பேட்டி:

பிரதமர் மோடியின் ஆட்சியில், அசுர வேகத்தில் வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

முன்பெல்லாம், 'மக்கள் நலத்திட்ட நிதி, ஏழைகளை சென்றடைவதற்குள், பாதியிலேயே மாயமாகி விடும்' என, முன்னாள் பிரதமர் ராஜிவ் ஒப்புக் கொண்டார்.

ஆனால், ஜன்தன் வங்கி கணக்கு, ஆதார், மொபைல் ஆகிய மூன்றையும் இணைத்து, இடைத்தரகர்களை மோடி அரசு முற்றிலும் ஒழித்துக் கட்டியுள்ளது.

காஷ்மீரில், 70 ஆண்டுகளாக இருந்த சட்டப்பிரிவு 370 என்ற முட்டுக்கட்டையை உடைத்தெறிந்ததால், காஷ்மீர் இப்போது முழுமையாக இந்தியாவுடன் இணைந்துள்ளது.

கல்வீச்சும், தேசியக் கொடியை எரிக்கும் அவலமும் அரங்கேறிய காஷ்மீரில், இன்று பள்ளிகளும், கோவில்களும் அமைதியாக திறக்கப்பட்டு, தேர்தல் திருவிழாக்கள் நடந்து வருகின்றன.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை கொன்று குவித்த, நக்சலைட்டுகளின் ஆட்டம் ஒடுக்கப்பட்டு உள்ளது.

பயங்கரவாதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. 'சர்ஜிகல் ஸ்டிரைக்' வாயிலாக, பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பல பிரிவுகளாகப் பிரிந்து மோதியபோதும், மோடி யாருடைய பக்கமும் சாயாமல், 'இந்திய மக்களின் பாதுகாப்பு பக்கம்' மட்டுமே உறுதியாக நின்றார்.

வரும் 2047-ல், இந்தியா தன் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, நாட்டை உலகின் தலைசிறந்த வல்லரசு நாடாக மாற்றுவதே, பிரதமரின் ஒரே லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.