Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானின் டோக்கியோவில் ஆரம்பப் பாடசாலையில் தீ விபத்து - மாணவர்கள் கவலைக்கிடம்

ஜப்பானின் டோக்கியோவில் ஆரம்பப் பாடசாலையில் தீ விபத்து - மாணவர்கள் கவலைக்கிடம்

20 ஆனி 2026 சனி 15:54 | பார்வைகள் : 145


ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில்  வெள்ளிக்கிழமை 19.06.2026 ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பல மாணவர்கள் தீயினால் வெளிக்கிளம்பிய புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இருந்த அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டோக்கியோவின் கிடா வார்டில் அமைந்துள்ள தாகினோகாவா டாய்-சான் பாடசாலையின் மேல் தளத்தில் உள்ள இசை அறையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பரவியதை அடுத்து, சில மாணவர்கள் வகுப்பறை ஜன்னல்களின் வழியே கீழே குதித்துத் தப்பியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் ஏணிகளைப் பயன்படுத்தி குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆறாம் தர மாணவி ஒருவர், “நாங்கள் இசை அறைக்கு இரண்டு அறைகள் தள்ளியிருந்தோம். திடீரென புகை வாசனை வந்தது. யாரோ சமைக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தோம். 

ஆனால், உடனடியாக எச்சரிக்கை சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டது. நாங்கள் அனைவரும் கைகுட்டைகளால் வாயை மூடிக்கொண்டு, படிக்கட்டுகள் வழியாக விளையாட்டு மைதானத்திற்கு ஓடினோம். அப்போது இசை அறை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததுடன், பலத்த வெடிப்புச் சத்தமும் கேட்டது. மாணவர்கள் அனைவரும் பயந்து அழுதனர்” எனத் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு பெற்றோர்கள் ஓடிவந்து தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். காயமடைந்த ஆசிரியர் மற்றும் புகையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து டோக்கியோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.