Paristamil Navigation Paristamil advert login

60 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை: 41°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு!!

60 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை: 41°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு!!

20 ஆனி 2026 சனி 07:30 | பார்வைகள் : 364


கடும் வெப்பஅலை தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 60 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கில் இருந்து வடகிழக்கு பகுதிகளில் 35°C முதல் 38°C வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையமான Météo-France தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை 41°C வரை எட்டும் அபாயமும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வடபகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் புயல் ஏற்படும் சாத்தியமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய வெப்பஅலை 2003 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவான கடுமையான வெப்பநிலைக்கு ஒப்பானதாக இருக்கக்கூடும் என Météo-France எச்சரித்துள்ளது. இதனால் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் 20°C மேல் நிலைத்திருக்கும் என கூறப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த அவசரநிலையை முன்னிட்டு, பிரதமர் Sébastien Lecornu இன்று 20ம் திகதி சனிக்கிழமை காலை உள்துறை அமைச்சகத்தில் இடைக்கால அமைச்சரவை அவசரக் கூட்டத்தை நடத்துகிறார். இதில் உள்துறை, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கடந்த காலங்களில் காட்டுத்தீ, கொரோனா பரவல் மற்றும் முந்தைய வெப்பஅலை சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்ட அவசர ஒருங்கிணைப்பு மையமே தற்போது மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.