Paristamil Navigation Paristamil advert login

புதிய ஐரோப்பிய குடியேற்ற விதிகளை அமுல்படுத்த பிரான்ஸ் சிரமம்!!

புதிய ஐரோப்பிய குடியேற்ற விதிகளை அமுல்படுத்த பிரான்ஸ் சிரமம்!!

19 ஆனி 2026 வெள்ளி 21:48 | பார்வைகள் : 409


புதிய ஐரோப்பிய அகதி மற்றும் குடியேற்ற ஒப்பந்தத்தின் படி, அகதி கோருபவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன் எல்லைப்பகுதியில் தங்கவைக்கப்பட வேண்டும். பிரான்சில்,  Paris-Charles de Gaulle விமான நிலையம் இதற்கான முக்கிய காத்திருப்பு மையங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், இந்த விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்கனவே சிக்கல்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புதிய "எல்லை அகதி நடைமுறை" (procédure d’asile à la frontière) படி, அகதி அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளவர்களின் கோப்புகள் முதலில் பரிசீலிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அவர்கள் பிரான்ஸ் நிலப்பரப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய ஒப்பந்தம் அகதி கோருபவர்களை அதிகபட்சம் 12 வாரங்கள் வரை எல்லையில் தங்கவைக்க அனுமதிக்கிறது. ஆனால், பிரான்ஸ் இன்னும் இந்த ஐரோப்பிய விதிகளை தேசிய சட்டத்தில் இணைக்கவில்லை. எனவே, மக்களை மூன்று மாதங்கள் வரை காத்திருப்பு மண்டலங்களில் அல்லது தடுப்பு மையங்களில் வைத்திருக்க சட்டரீதியாக முடியாது. 

இதனால், அதிகாரிகள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டல் குடியிருப்பில் அவர்களை தங்க வைக்கும் தற்காலிக தீர்வை பயன்படுத்துகின்றனர். இதன் நோக்கம், அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை எளிதாக நாடு கடத்துவதாகும்.

இந்த அமைப்பை பலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். அகதி கோருபவர்கள் அதிகாரப்பூர்வமாக தடுப்பில் இல்லை என்றாலும், 48 மணி நேரத்திற்கும் மேலாக வெளியே இருக்க முடியாது. இல்லையெனில், அவர்கள் தங்களின் அகதி கோரிக்கையை கைவிட்டதாகக் கருதப்படுவார்கள். 

பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Léa Balage El Mariky, "பிரான்சிலேயே இருந்து பிரான்ஸ் நிலப்பரப்பில் இல்லை என்று கூறுவது ஒரு சட்டப் புனைக்கதை" எனக் குற்றம்சாட்டி, இந்த முறையை அபத்தமானதும் செயல்பாடற்றதுமாக விவரித்துள்ளார்.