Paristamil Navigation Paristamil advert login

சமூக நீதி கணக்கெடுப்பை நடத்த முடிவு; கவர்னர் உரையில் தமிழக அரசு தகவல்

சமூக நீதி கணக்கெடுப்பை நடத்த முடிவு; கவர்னர் உரையில் தமிழக அரசு தகவல்

19 ஆனி 2026 வெள்ளி 07:10 | பார்வைகள் : 166


 த.வெ.க., அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

விரைவில் சமூக நீதி கணக்கெடுப்பு

* ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே, உண்மையான சமூக நீதி என்பதே, அரசின் அடிப்படை கொள்கை. இந்த கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைத்து விரைந்து முடிக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்னர், தமிழக அரசு சமூக நீதிக்கான கணக்கெடுப்பை நடத்தும்.

இருமொழி கொள்கையில் உறுதி

* தமிழகத்தில் மும்மொழி கொள்கை நீக்கப்பட வேண்டும்; தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என, 1968ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை இருமொழி கொள்கைதான் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக மக்களால் ஏற்கப்பட்ட இந்த கொள்கையை அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்.

வழக்காடும் மொழியாக தமிழ்

* சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், தமிழ்மொழியை வழக்காடும் மொழியாக பயன்படுத்தவும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவும், மத்திய அரசை தமிழக வெற்றிக் கழக அரசு வலியுறுத்தும்.

நிதியை விடுவிக்க கோரிக்கை

* தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்திற்கு, 3,458 கோடி ரூபாயை விடுவிக்க முடியும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. இது மும்மொழி கொள்கையை, தமிழகத்தில் திணிப்பதற்கு சமமாகும். எனவே, இந்த நிலைப்பாட்டை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழகத்திற்குரிய நிதியை உடனடியாக விடுக்க வேண்டும்.

மேகதாதுக்கு சட்ட போராட்டம்

* நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கவும், அதைத் தொடர்ந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி, தென் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்கவும், அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்

* காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயன்று வருகிறது. இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தவும், தமிழகத்திற்கான நீரை உரிய காலத்தில் பெற்று தரவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது

* முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியை தடுக்கவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கனிமவள வருவாய் இரட்டிப்பு

* தமிழக கனிம வளத் துறையில் ஊழல், முறைகேடுகள் மலிந்து கிடக்கின்றன. இதன் வாயிலாக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை திறம்படவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நீடித்த காலத்திற்கு பயன்படுத்துவதையும் இந்த அரசு உறுதி செய்யும்.

* சட்டவிரோத கனிம தொழிலும், வரி ஏய்ப்பும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். இதன் வாயிலாக கனிமங்கள் வாயிலாக கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க, அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

* நிர்வாக அமைப்பில் மலிந்து கிடக்கும் ஊழலை வேரோடு அறுத்து, நேர்மையான, வெளிப்படையான, துாய்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதில், அரசு உறுதியாக உள்ளது. அதற்கேற்ப அனைத்து துறை சார்ந்த கொள்முதல்கள் மற்றும் டெண்டர்கள் எவ்வித ஒளிவுமறைவும் இன்றி, கடுமையான கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். கடந்த காலங்களில் நிலவிய முறையற்ற நிதி பரிமாற்றங்களும் இடைத்தரகர்களின் தலையீடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

போதைப்பொருள் ஒழிப்பு

* தமிழகத்தில் சில ஆண்டுகளாக போதைப்பொருள் கலாசாரம் வேரூன்றியுள்ளது. அதை கட்டுப்படுத்த, முந்தைய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதல் காரணம், மாநிலத்தில் பரவலாக கிடைக்கும் போதைப்பொருள் புழக்கம் தான். போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில், அரசு முழு மூச்சுடன் செயல்படும்.