Paristamil Navigation Paristamil advert login

நாயகனாக அறிமுகம் ஆகிறார் இயக்குநர் ஷங்கரின் மகன்!

நாயகனாக அறிமுகம் ஆகிறார் இயக்குநர் ஷங்கரின் மகன்!

18 ஆனி 2026 வியாழன் 15:45 | பார்வைகள் : 184


தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் ஷங்கர். பல வெற்றி திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அவர், அண்மையில் தமிழில் இயக்கிய ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கில் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த இரண்டு படங்களின் தோல்விக்குப் பிறகு, ஷங்கர் அடுத்ததாக எந்த திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் அவரது அடுத்த படைப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில், ஷங்கர் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய வாரிசு சினிமா துறைக்குள் அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார். தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித், கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அட்லீயின் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக் இயக்கும் இந்த புதிய திரைப்படத்தின் பூஜை விழா நேற்று எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும், குறுகிய காலத்திலேயே முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.